June 06, 2010

குழந்தையின் கல்வி எங்கிருந்து ஆரம்பமாகின்றது? (part 3)

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்.

இதுவரை வந்த இரண்டு பாகங்களில் குழந்தை பிறப்பதற்கு முன்னர் என்ன என்ன விதங்களில் நம்மை மெருகூட்டிக் கொள்ளலாம் என்பதனைப் பார்த்தோம். எனவே, நல்ல குழந்தைகளை பெற்றெடுப்பதும் வளர்ப்பதும், குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரே நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று என்பதனை மீண்டும் வலியுறுத்துகிறது, இஸ்லாம்.

ஒருமுறை அபுல் அஸ்வத் அத் து'ஆலீ என்பவர் தன் குழந்தைகளை நோக்கிக் கூறினார், "நான் உங்களுக்கு நல்ல தந்தையாக இருந்தேன், நீங்கள் குழந்தையாய் இருந்தபோது பின் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின், இன்னும் நீங்கள் பிறப்பதற்கு முன்ன‌ரும்" அப்பொழுது அவரின் குழந்தைகள் கேட்டனர்,"அதெப்படி நாங்கள் பிறக்கும் முன்னரே நீங்கள் எங்களுக்கு நல்லது செய்ய முடியும்?" அதற்கு அபுல் அஸ்வத் கூறினார்,"உங்களுக்காக ஒரு நல்ல குணமுள்ள பெண்ணை, நீங்கள் பிறந்த பின் உங்களை நல்ல விதத்தில் கவனித்துக்கொள்ளும் பெண்ணை நான் மனைவி ஆக்கிக் கொண்டதன் மூலம்"

இன்னும் ஓர் அறிஞர், அர் ரியாஷீ தன் குழந்தைகளிடத்தில் கூறியதாவது,"நான் உங்களுக்கு செய்த எல்லா நல்ல காரியங்களிலும் முதன்மையானது, உங்களுக்காக ஒரு நல்ல வம்சத்தில் வந்த, நற்குணம் கொண்ட மேன்மையான பெண்ணை திருமணம் செய்ததாகும்"

எனவே இவ்வாறான முன்மாதிரிகள் மூலம் மீண்டும் மீண்டும் புலப்படுவது என்ன, திருமண விஷயத்தில் காட்ட வேண்டிய அக்கறை, தேர்ந்தெடுக்க வேண்டிய வழிமுறை இவையெல்லாம்.

இனி, குழந்தை பிறப்பதற்கு முன்னரே அல்லாஹ்வினிடத்தில் அதற்காக எவ்வாறு து'ஆ செய்யலாம் என்பதையும், எவ்வளவு சிரத்தையாய் இந்த நேரங்களில் இருக்க வேண்டுமென்பதையும் காணலாம், இன்ஷா அல்லாஹ்.

திருமணம் முடிந்த பின் குழந்தை பிறப்பை இப்பொழுதெல்லாம் தள்ளிப் போடுவது ஃபேஷனாகி விட்டது. எனக்கு தெரிந்த ஓர் குடும்பத்தில் கல்யாணம் செய்தவுடன் அமெரிக்கா வந்துவிட்டதால் இரண்டு மூன்று வருடங்கள் நன்கு சுற்றிப் பார்ப்பதிலும் பொறுப்புகளில்லாமல் சுதந்திர‌மாய் இருப்பதுவுமென நினைத்து மூன்று வருடங்கள் தள்ளிப் போட்டன‌ர். இப்பொழுது அல்லாஹ் இன்னும் அவர்களுக்கு நாடவில்லை. மறைமுக ஏச்சு பேச்சுக்களை தாங்கிக் கொண்டுள்ளனர். நம் தாய் தந்தையர் வளர்ந்த விதம் வேறு, நாம் வள்ர்ந்த விதம் வேறு. வேறு நாடுகளில் வந்து தங்கும்பொழுது, அவர்களுடைய உணவுப் பொருட்களை நம் கலாசரத்தில் கொண்டு வ‌ரும்பொழுது, வேகத்திற்கு ஈடு கொடுக்கும் பேரில் சத்தான உணவுகளை விட்டு விட்டு உறைந்து செத்துப் போன காய்கறிகள், மாமிசம ஆகியவற்றை புழங்குவது போன்ற சில பல விஷயங்களால் நம் உடல் அதன் ஹார்மோன்க‌ளில் பற்பல வித்தியாசங்களை கொண்டு வருகிறது. இதனால் மேற்கண்ட நிலையை அடைய வேண்டியிருக்கிறது. இவர்களிப் போலவே இன்னும் பல குடும்பங்களையும் பார்த்திருக்கிறேன். அவர்களின் நிலையை கண்டு கண்ணீர் விட்டலும், அவர்களுக்கு புரியாததை எண்ணி வியந்தே போகிறேன். தேவை என்னவென்றாலும் அல்லாஹ்வினிடத்தில் நம்பிக்கை வைத்து மீண்டும் மீண்டும் முயற்சிப்பதும், நம் வாழ்க்கையை ஹலாலாக வைத்து, இஸ்லாம் கூறும் வகையில் வாழ்வதுமே வெற்றியை தரும். வருடங்கள் பல ஆனாலும் நம்பிக்கை வேண்டும். அய்யூப் நபிக்கு இறைவன் 90 வயதில் குழந்தைப்பேறை தரவில்லையா? இப்றாஹீம் நபிக்கு, அவர் மனைவி தன்னை மலடி என்று கூறிய பின்னும் அல்லாஹ் பல நல்மக்களை தரவில்லையா? இன்னும் இதைப் பற்றி பேசிக் கொண்டே போனால் நம் கட்டுரையின் கருவிலிருந்து விலகிவிடும் அபாயம் அதிகமாக தெரிகின்றது, எனவே இன்ஷா அல்லாஹ் நாம் இதைப் பற்றி காலம் வரும் போது கவனிப்போம், இன்ஷா அல்லாஹ்.


து'ஆ ஒரு இறை நம்பிக்கையாளனின் ஆயுதம் என்று இமாம் இப்னுல் கய்யிம் (ரஹி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

"து'ஆ என்பது ஆயுதம் போன்றது. மேலும் ஆயுதத்தின் கூர்மையை விட அதனை உபயோகிப்பவரின் திறமையே அந்த ஆயுதத்தின் மூலம் பயனை அளிக்கும். அந்த ஆயுதமும் கூர்மையாய் இருந்து குறைகள் ஏதும் இல்லாமலிருக்கும் பட்சத்தில், அதை உபயோகிப்பவரின் புஜங்களும் வலிமையானதாக இருக்கும் பட்சத்தில், இனி அவனை தடுத்து நிறுத்த வேறு எதுவும் கிடையாது எனும் பொழுது, அவன் பார்வையிலிருந்து பகைவன் தப்ப முடியாது. ஆனால் இந்த மூன்று விடயங்களில் ஏதேனும் ஒன்று இல்லையென்றாலும், ஆயுதம் அதன் பலனை தராது."

எனவே நம்பிக்கையுடனும், அந்த நம்பிக்கையின் மேல் நல் அமலுடனும் அல்லாஹ்வினிடத்தில் நாம் து'ஆ கேட்கும் பொழுது இன்ஷா அல்லாஹ் அது கண்டிப்பாக வெற்றி தரும். இறைவனே எல்லாவற்றையும் அறிந்தவன்.

து'ஆவைப் பற்றி இப்பொழுது எதற்கு என்று கேட்கிறீர்களா? உறவு கொள்ளும் பொழுது கூற வேண்டிய து'ஆவையும் அலட்சியமாய் விடும் சூழ்நிலையை யோசித்துதான். உறவு கொள்ளும் முன் ஒழுவுடன் இருப்பதும், அதற்கு முன் இரு ரக்‍அத்துக்கள் தொழுது அல்லாஹ்வினிடத்தில் ஷைத்தானிடத்திலிருந்து பாதுகாப்பு கேட்பதும், அந்நேரத்தில் இஸ்லாமிய வழிமுறைகள் என்னவோ அதை கடைபிடிப்பதும் மிக மிக முக்கியமானது.

உறவு கொள்ளும் பொழுது கூற வேண்டிய து'ஆ

தமிழில் : "பிஸ்மில்லாஹ். அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபஷ் ஷைத்தான மாரஜக்தனா"
மொழிபெயர்ப்பு: "அல்லாஹ்வின் பெயரால். யா அல்லாஹ், ஷைத்தானிடத்திலிருந்து எங்களுக்கும், எங்களுக்கு எதை (ரிஜக் / குழந்தை) கொடுக்க நாடியிருக்கின்றாயோ அதற்கும் பாதுகாப்பு அளிப்பாயாக".
புகாரி 6/141, முஸ்லிம் 2/1028

இதன் பின், குழந்தைப்பேறு உறுதிபடுத்தப்படும் வரை அதிகமதிகம் கூற வேண்டிய து'ஆ:
தமிழில்: "ரப்பி ஹப்லி மின்லதுன்க்க துர்ரியத்தன் தய்யிபத்தன் இன்னக்க ஸமீயுத் து'ஆ"
மொழிபெயர்ப்பு:"யா அல்லாஹ், எனக்கு நல்லதொரு வாரிசை தந்தருள்வாயாக. இன்னமும் நீயே எல்லாவற்றையும் கேட்பவனாக இருக்கிறாய்" (குர்'ஆன்‍-ஆலே இம்ரான் 38)
அதன் பின் வரும் காலங்களில் அதிகமதிகம் கூற வேண்டிய து'ஆ:

தமிழில்: "ரப்பி ஜல்னி முகீமஸ்ஸலாத்தி வ மின் ஜுர்ரியத்தி ரப்பனா வத கப்பல் து'ஆயீ"
மொழிபெயர்ப்பு:"யா அல்லாஹ், என்னை தொழுகையை  நிலைநிறுத்துபவனாக ஆக்குவாயாக. இன்னும் என் மக்களையும் அவ்வாறே ஆக்குவாயாக. யா அல்லாஹ் என் து'ஆவை ஏற்றுக் கொள்வாயாக."
(குர்'ஆன்-இப்றாஹீம்:40)

இனி, மிக முக்கியமான ஒன்பது மாதங்கள். இன்ஷா அல்லாஹ், அம்மாதங்களில் எவ்வாறெல்லாம், குழந்தைக்கு இஸ்லாத்தையும் அதன் வழிமுறைகளையும், குர்'ஆன், ஹதீஸ் மேல் ஆர்வத்தையும் வளர்க்கலாம் என்பதை காண்போம்.

மீண்டும் சந்திப்போம்.
அதுவரை தேவை து'ஆ



June 04, 2010

நஸீஹா Man

நஸீஹா Man.
இது நான் மிக விரும்பி பார்க்க ஆரம்பித்த காமிக்ஸில் ஒன்று. ஆனால், வல்ல இறைவன் அதை ஆக்கபூர்வமாக கொண்டு வந்தவரின் வாழ்க்கையில் வேறு முடிவு நாடியிருந்தான். காமிக்ஸை பார்த்து மகிழுங்கள்.


காமிக்ஸின் கதை, அதை ஆரம்பித்தவரின் கதை பற்றி அறிய, இங்கே சொடுக்குங்கள். நன்றி.


தாய் எனும் வைரம் --1

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்

வைரம் மட்டுமே மற்றொரு வைரத்தை அறுக்கவோ, அதை செதுக்கவோ அதன் மூலம் மின்ன வைக்கவோ முடியும். இந்த தொடரில் நாம் நம் சமுதாயத்தில் மின்னிய இன்னும் மின்னிக் கொண்டிருக்கின்ற வைரங்களையும் அவர்களை வைரங்களாக்குவதில் தன் வாழ்வையே அர்ப்பணித்த தாய் எனும் வைரங்களையும் பார்க்க போகின்றோம், இன்ஷா அல்லாஹ்.

மீண்டும் கூறுகின்றேன், இது தாய்க்கு மட்டுமல்ல. தந்தைமார்களும் தங்களால் முடிந்த அளவு குழந்தைகளை நல்வழியில் வளர்க்க பொறுப்பேற்க வேண்டும். சரி, இனி முதல் வைரத்தை பார்க்கலாம். எந்த வித அளவுகோல்களைக் கொண்டும் நான் இவர்களை ஒன்று, இரண்டு என்று வரிசைப் படுத்தவில்லை. ஞாபக்த்தில் வருவதைக் கொண்டும், வலையில் ஆதாரம் கிட்டுவதைக் கொண்டுமே நான் வரிசைப் படுத்தியுள்ளேன். ஏதேனும் தவறிருந்தால், தயவு செய்து சுட்டிக் காட்டவும். நன்றி.

மதீனாவின் பழைய காலம் அது. எங்கெங்கு நோக்கினும் ஹதீத்களையும் குர்'ஆனையும் படிக்கவும், மனப்பாடம் செய்யவும், அதை ஆராய்ந்து அறியவும், அதன் மூலம் பல துறைகளில் அறிவை வளர்த்தவும் என ஆலிம்களாலும், தாபயீன்க‌ளாலும், சில சஹாபாக்களாலும் மதீனாவின் தெருக்கள் நிறைந்திருந்த காலம் அது. அத் தெருக்களின் வழியே அச்சிறுவன் சென்று கொண்டிருந்தான். புறாக்களை துரத்துவதிலும், பாடித் திரியும் நாடோடிகளை பின் தொடரவுமே அவனின் நேரம் சரியாக இருந்தது. அதனால் அவன் படிக்கவில்லை என்றில்லை, என்றாலும் கல்விக்கும், ஞானத்திற்கும் புகழ் பெற்ற அந்த குடும்பத்தில் இச் சிறுவனைப் பற்றிய கவலை தொடர்கதையானது.

தந்தைக்கு மிகவும் வருத்தமாக இருப்பினும், நல்வழியிலேயே அச்சிறுவனை நேர்வழியில் கொண்டு வர நினைத்தார். எனவே ஓர் நாள், ஓர் போட்டி வைத்தார், அச் சிறுவ‌னும் அவனின் அண்ணனும் அதில் பங்கு பெற்றனர். அச் சிறுவனின் தந்தை ஓர் கேள்வியை கேட்டார். அச் சிறுவன் தவறான பதிலை கூறினான், அவனின் அண்ணன் சரியான விடையை கூறினார். தந்தை அச் சிறுவனைப் பார்த்து கூறினார்,
"பறவைகளிடத்தில் நீ செலுத்தும் நேரம் உன்னை கல்வியிலிருந்து தூரமாக்கி விட்டது என்றே எண்ணுகின்றேன்".
சிறுவன் வெட்கி தலை குனிந்தான், பின் கூறினான்.
"நான் இந்த படிப்பிலெல்லாம் கவனம் செலுத்தப் போவதில்லை. நானும் பிரபல பாடகனாக போகின்றேன்".
அச்சிறுவனின் தாய் கூறினார்,
"நல்ல குரல்வளம் இல்லையென்றால் நல்ல களையான முகமிருந்தும் பலனில்லை"
சிறுவன் மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்தான். என்ன செய்ய? அத் தாய் கூறினார்,
"இசை உன்னை உயர கொண்டு செல்லாவிட்டாலும் ஞானம் உன்னை வெகு உயரத்தில் கொண்டு சேர்க்கும்"
மறுநாள் அத்தாய், அக்காலத்தில் ஆலிம்களும் அவர்தம் மாணவ‌ர்களும் உடுத்தும் உடைகளைப் போன்ற உடைகளை கொண்டு வந்தார். அதை கண்டவுடன் அச் சிறுவன், மிகவும் மகிழ்ச்சியடைந்து எப்படி படிக்க போவது, எப்படி ஞானத்தை தேடுவது என்று கேட்டான். அத்தாய் அந்த உடைகளை அச்சிறுவனுக்கு உடுத்தி பின்னர் கூறினார்.
"ராபியா என்னும் ஆசிரியரிடம் போய் சேர்வாயாக. ஆனால், அவரிடமிருந்து கல்வி கற்கும் முன்னர் அவரின் அதபை (ஒழுக்கங்களை) கற்பாயாக!
என்று கூறினார். அத்தாய் சரியான நேரத்தில் பக்குவப் ப‌டுத்தி கல்வி கற்க அனுப்பிய அச் சிறுவனே இன்று ஹதீதுகளின் விஷயத்தில் நட்சத்திரமாய் மின்னுபவர் என அவரின் மாண‌வர்களால் புகழப்பட்ட, இன்றும் புகழப்படுகின்ற இமாம் மாலிக்.

பாடம்:

1. குழந்தைகளை நேர்வழிப்படுத்த வன்முறையை உபயோகப் படுத்தாதீர். அன்பாய், பக்குவமாய் அவர்களை அணுகுங்கள்.
2. குழந்தையின் ஆசிரியர் விஷயத்தில் கவனமாய் இருங்கள். ஞானம் மட்டும் ஒரு மனிதனை முழுமைப் படுத்தாது, அவனின் ஒழுக்கங்களே அவனைப் பற்றி காலாகாலத்திற்கும் பேசும். எனவே ஒழுக்கத்தில் சிறந்த மனிதரையே ஆசிரியராக தேர்ந்தெடுங்கள். அவர் மற்றவர்களைவிடவும் ஞானத்தில் குறைந்தவராக இருப்பினும் சரி.
3. சரியான நேரத்தில் பக்குவப் படுத்துவதே அவர்களின் வாழ்வில் இறுதி வரை கை கொடுக்கும். குழந்தைதானே, வளர்ந்தபின் சரி செய்து கொள்ளலாம் என அப்பொழுதும் எண்ணாதீர்கள். பின் சமயமே கிட்டாது.
    இமாம் மாலிக் பற்றி மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்.

    இன்னும் பல வைரங்களை பார்க்கலாம்.
    மீண்டும் சந்திப்போம்.
    அதுவரை தேவை து'ஆ.
    வஸ்ஸலாம்.