September 14, 2015

கேலண்டரும், ஒற்றைப்படை எண்களும்...

AQAD.IN என்னும் ஒரு வலைதளம் உள்ளது. அதில் தங்களின் பிள்ளையின் பெயரையோ அல்லது நீங்கள் ஆசிரியராக இருந்தால் உங்களின் பெயரையோ பதிவு செய்து வைத்துக்கொண்டால் தினமும் ஓரிரு கேள்விகள் உங்களின் தொலைபேசிக்கு வந்து சேரும். ஆங்கிலம், அறிவியல், கணிதம், வரலாறு, பகுத்தறிதல் எனப் பலதரப்பட்ட கேள்விகள். மிகவும் பயனுள்ள ஒரு வலைதளம் உபயோகித்துப் பாருங்கள்.
இன்று அந்த வலைதளத்தில் எந்த மாதத்தில் 28 நாட்கள் உண்டு எனக் கேட்டிருந்தார்கள். அதனை ஒமருக்கு விளக்குவதற்காக ஒரு யூடியூப் காணொளியை உபயோகிக்கும்போது மேலும் சில பாடங்களுக்கு வழி வகுத்தது. ஒற்றைப்படை எண்கள், இரட்டைப்படை எண்களைப் பற்றியும் படித்தோம்.அதை விளக்குவது வெகு எளிதாக இருந்தது. 10 கொண்டைக்கடலைகளைத் தந்து, ஒவ்வொரு எண்ணையும் அந்த கடலைகளைக் கொண்டு எனக்கும் அவனுக்கும் இடையில் பிரிக்கச் சொன்னேன். எப்பொழுது முழு கடலையாக யாருக்கும் கிடைக்காமல் ஒன்று மிஞ்சுகிறதோ அந்த எண் ஒற்றைப்படையாகும் என்றேன். மிகவும் எளிதாகப் புரிந்து விட்டது அவனுக்கு. அதன் பின் ஈரிலக்க எண்ணாக இருந்தாலும் சரி, இல்லை அதை விடப் பெரிய எண்ணாக இருந்தாலும் சரி, இறுதியில் இருக்கும் ஒற்றை இலக்கத்தின் மீதே அவனின் கவனம் இருக்க வேண்டும் என்றும் கற்றுத் தந்தேன். இறுதியில் பூஜ்ஜியம் மட்டுமே மிஞ்சினால், அதனை 10ஆக எடுத்துக்கொண்டு செயல்பட சொல்லித்தந்தேன். நிமிடங்களில் அவனுக்கு அது இனிமையான பாடமாகி விட்டது.
க்ஹைர்.... நாங்கள் பார்த்து கலந்தாய்வு செய்த காணொளியும் மிகவும் எளிமையான விதத்தில் ‘காலண்டர்’இன் வரலாறு குறித்துப் பேசியது. அதனைப் பற்றி பேசும்போது கி.மு, கி.பி போன்றவற்றையும் போகும்போக்கில் ஒமரின் காதில் போட்டு வைக்க முடிந்தது. எல்லாமே அவனுக்கு புரிந்திருக்குமா தெரியவில்லை. 2016 லீப் வருடம் என்பதால் அந்த வருட ஃபிப்ரவரியில் இன் ஷா அல்லாஹ் நினைவிருந்தால் மீண்டும் இந்தப் பாடத்தை அலச எண்ணுகின்றேன்.


எண் கணித விளையாட்டு

ஒமர் முன்னர் படித்துக்கொண்டிருந்த மாண்டெஸ்ஸரியில் கணிதத்திற்காக NCHRT புத்தகங்களை உபயோகிக்கிறார்கள். திடீரென நான் மீண்டும் வீட்டுக்கல்வியை ஆரம்பித்ததால், அதே புத்தகங்களை தொடர்ந்து கொண்டுள்ளேன்.

இதில் படம் ஒன்றில் கொடுக்கப்பட்டுள்ள கணித விளையாட்டு, அவனின் புத்தகத்தில் இருந்ததைத் தழுவி வரையப்பட்டது. பார்த்தாலே புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிதான விளையாட்டுதான். கணிதத்தில் கழித்தலும், கூட்டலும் சொல்லித்தர, நன்கு பழக்க இது தகுந்த புத்தகமாக உள்ளது. படிப்பு, வாசிப்பு, கதை, கவிதை என எல்லாவற்றிலும் மிகுந்த ஆர்வமும் ஆற்றலும் உள்ள ஒமருக்கு கணிதம் என்பது என்னைப்போலவே கொஞ்சம் கசக்கத்தான் செய்கின்றது. எனினும் அவனுக்கு பிடிக்கும்படி அதனை மாற்ற வேண்டும், இலகுவான பாடமாய் அவனுக்கு உணர வைக்க வேண்டும் என கொஞ்சம் மெத்தனப்படத்தான் செய்கின்றேன். அதனால்தான் இந்த விளையாட்டும்.ஒரு ஏணி போன்றோ, பாம்பைப் போன்றோ படத்தை வரைந்து அதன் நடுவில் கட்டங்கள் இட்டு, எதோ ஒரு எண்ணில் இருந்து ஆரம்பித்து அந்தப் படத்தின் முடிவு வரை தொடருங்கள். பிறகு இரண்டு அல்லது மூன்று நபர்களை அந்தப் படத்துடன் சம்பந்தப்படுத்தி, கேள்விகளை அமையுங்கள். 5 கேள்விகளுக்கு மேல் வேண்டாம். ஒவ்வொரு நபருக்கும் நடுவில் 2 அல்லது 3 எண் வித்தியாசம் வருவது போல அமைப்பதும், ஒரு நம்பரையேனும் எளிய எண்ணாக, 2 அல்லது 5 போன்று வடிவமைப்பதும் இலகுவைத் தரும். வீட்டில், வார இறுதிகளில் கூட செய்து பாருங்கள்.


September 11, 2015

ஒமரின் வலைப்பூ........

என்னாங்கப்பூ.... இந்த வயசிலேயே வலைப்பூவா என நீங்கள் கேட்பது புரியுது சகோஸ்.... ஆனால் இது நம்மை மாதிரி மொக்கை வலைப்பூ இல்லை... ஹ ஹா.... ஒமரின் கதைகள், கவிதைகள் எனப் பலதையும் பதிவேற்றி வைக்க ஓரிடம்.

போன வருடம் ஒமர் ஒரு கதை எழுதி, அதனை ராபின் ஏஜ் பத்திரிக்கைக்கும் அனுப்பி, அது பதிவானது. அதைப் பற்றி இங்கே எழுத மறந்து விட்டேன். ஆனால் முகநூலில் எழுதியிருந்தேன். அதன் பின் இப்போது வலைப்பூவில் எழுதுவது அவனுக்கு ஒரு ஊக்கத்தை தருகிறது, மகிழ்வையும். எனவே ஆரம்பித்து தந்தாயிற்று.

Omar's Stories link -- > https://omarstories.wordpress.com/

நேரம் இருப்பின் ஒரு எட்டு இங்கேயும் விசிட் செய்து வையுங்கள் சகோஸ்.... மிக்க நன்றி :) :) :)


September 07, 2015

மீண்டும் நாங்கள்..... :) :)

சகோஸ்....

எல்லோரும் நலமா???

பல வருடங்களுக்குப் பின் மீண்டும் வீட்டுக்கல்வியை ஆரம்பித்துள்ளேன். ஜுஜ்ஜுவுடன் தான் :) :)

அவர் மூன்றாம் வகுப்பில் படித்து வந்தார். பின் இப்போது என்னுடன் வீட்டிலேயே கல்வி கற்பதற்காக ஓடோடி வந்து விட்டார். அவருக்கு பின்னுள்ள இருவரும் சென்னையில் ஒரு பிரபல மாண்டெஸ்ஸரியில் படிக்கின்றார்கள். இவரும் அதில்தான் படித்துக்கொண்டிருந்தார். எனினும் இவரின் விருப்பம் என்னிடம் பயில்வதில்தான் அதிகம். எனவே மீண்டும் இனிதே ஆரம்பம். அவ்வப்போது இங்கேயும் எங்கள் நாட்கள் எப்படி செல்கின்றன எனப் பதிந்து வைக்கின்றேன்.


இன் ஷா அல்லாஹ். :) :)