December 25, 2015

‪குழந்தைநேயப்பள்ளிகள்‬ - ஒரு கலந்துரையாடல்

கடந்த நவம்பர் இறுதியில் ‘குழந்தை நேயப் பள்ளிகள்’ மண்டலக் கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் சுடரொளி மேடம் அழைத்திருந்தாலும், கடும் மழை காரணமாக என்னால் அதில் பங்கெடுக்க இயலவில்லை. அதன் பின் வந்த நாட்களிலும் மழையே செய்தித்தாள்களிலும், நிகழ்வுகளிலும் மிகுந்த முக்கியமான இடத்தை பிடித்துக்கொண்டது. அவருடன் மீண்டும் பேசும் வாய்ப்பும் நேரமும் அமையவேயில்லை. எனவே இம்முறை நடக்கும் கூட்டத்தில் பங்கெடுக்கும்படி அழைப்பு வந்ததும், எப்படியேனும் கலந்துகொள்ளவேண்டும் என்னும் உத்வேகம் தொற்றி இருந்தது.
ஒரு பள்ளியை, சமூகத்தின் அனைத்து அடுக்குகளிலிருந்தும் வரும் பிள்ளைகளுக்கு பிடித்தமானதாக, உவப்பானதாக, பயனுடையதாக, அவர்களின் கற்றலார்வத்திற்கு பாதை அமைத்துத் தரும் வெளியாக எப்படி மாற்றுவது. இந்த நோக்கத்தில் கற்பித்தலை, உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் எப்படி அணுகுவது போன்ற கருத்துக்களை அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மனதில் விதைப்பதும், அதன் வெளிப்பாடுகளை சரியான கோணத்தில் கொண்டு செல்வதற்காகவும் 2009இல் சில அரசு ஆசிரியர்களாலும், குழந்தைகளின் கல்வி மேல் அக்கறை கொண்ட ஆர்வலர்களாலும் தொடங்கப்பட்டதே இந்த ‘குழந்தைகளைக் கொண்டாடுவோம்’அமைப்பு.
பல்வேறு களங்களிலும், தளங்களிலும், சூழல்களிலும் கடந்த ஆறூ வருடமாகக் கடந்து வந்த பாதையை சற்றே ஆசுவாசத்துடன் திரும்பிப் பார்ப்பதே இன்றைய கூட்டத்தின் நோக்கமாக இருந்தது. இதற்கும் எனக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா. இருக்கின்றது.
ஏன் HomeSchooling / வீட்டுக்கல்வியை நான் தேர்ந்தெடுக்க வேண்டும், காரணங்கள் என்ன. ஒட்டு மொத்த உலகமும் மறுபேச்சு பேசாமல் தத்தம் குழந்தைகளை தங்களின் வசதிக்கேற்ப ஒரு பள்ளியில் சேர்க்கும்போது, பள்ளிக்கூடத்திற்கே எனக்கு அனுப்ப மனமில்லை என முடிவெடுக்க காரணம் என்ன என்னும் கோணத்தில் பேசுவதற்காக என்னை அழைத்திருந்தார்கள். ஐந்து நிமிட அறிமுகம் மட்டுமே இது என்றாலும் அங்கு வந்திருந்த அத்தனை ஆசிரியர்களிடமும் ஒரு அவநம்பிக்கை கலந்த ஆச்சரியத்தைக் காண முடிந்தது. நேரமின்மையின் காரணமாக ஒரு சுருக்கமான உரையுடன் முடித்துக் கொண்டேன். இன் ஷா அல்லாஹ், இன்னும் விரிவாக புரிய வைக்க ஒரு வாய்ப்பை எதிர்நோக்குகின்றேன்.
என் பயணத்தினை விடவும், இந்த அவசர, இயந்திர உலகில் இன்னும் குழந்தைகளின் மென்மையான, மிக மெதுவாக நகரும் உலகத்தினுள் கலந்து அவர்களை, அவர்களின் விருப்பப்படி, அவர்களின் உவப்பை நாடி கற்பிக்கும் ஆசிரிய ஆசிரியைகள் இருபதிற்கும் மேலாக வந்திருந்தார்கள். ஒவ்வொருவரின் பயணமும், பார்வையும், அவர்கள் எடுக்கும் சிரமங்களும், நிர்ப்பந்தங்களுக்கும், சூழ்நிலைக் கைதுகளுக்கும் நடுவிலும் தன்னால் இயன்ற அளவிற்கு Child friendly school ஆக தங்கள் பள்ளியை மாற்ற அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளையும், அதன் வெற்றி தோல்விகளையும் கலந்தாய்வு செய்ததும், விடுமுறை நாட்களையும் இதற்கென ஒதுக்கிட முன்வந்ததையும் பார்த்து உண்மையில் மகிழ்கிறேன். எதிர்காலத்தை நமபகமான கைகளில்தான் ஒப்படைக்க இருக்கிறோம் என.
ஒவ்வொரு ஆசிரியரும் சொன்ன விடயங்கள், கருத்துக்கள், ஆலோசனைகள், குறைகள் என எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, எந்தப் பள்ளியில் பயிற்றூவிக்கும் ஆசிரியரும் இன்னும் மாறுபட்ட, பண்பட்ட கல்வியை குழந்தைகளுக்கு கொடுக்க இயலும். ஆசிரிய சமுதாயத்திற்கும், குழந்தைகளின் தனித்துவத்திற்கும், அவர்களின் வாழ்க்கைக்கல்விக்கும் இடையே உலகாயுதவாதிகளால், பொருள்முதல்வாதிகளால் ஏற்படுத்தப்பட்ட இடைவெளியை இந்த அமைப்பும், அதன் சேவைகளும் நிரப்பும் என நம்பிக்கை கொள்கிறேன்.
இரண்டு ஹைலைட்ஸ் :
எல்லோரின் அறிமுகமும் முடியும் வேளையில் கூடியிருந்தவர் அனைவர் சார்பாகவும், எனக்கு மீலாத் நபி வாழ்த்துக்களைச் சொன்ன ஆசிரியை... smile emoticon smile emoticon smile emoticon
கூட்டம் முடியும் முன், என் கை பிடித்து, எனக்கு நீங்கள் கூறிய உங்கள் குழந்தையின் இயல்புகள், அவனின் அறீவுப்பசிக்கு தீனி போட இயலாத இயலாமைகள் என எல்லாம் புரிகிறது. என் மகனின் விஷயத்திலும் இதையே நானும் சந்தித்துள்ளேன். ஆனாலும் பள்ளியிலிருந்து நிறுத்தும் தைரியம் இருக்கவில்லை. நீங்கள் முன்னேறுங்கள் எனப் பாராட்டிய ஆசிரியை... smile emoticon smile emoticon smile emoticon
இவையெல்லாவற்றையும் விட, வீடு திரும்பும் வழி முழுதும் என்னுடனேயே பயணித்த தோழர்.மலர்விழி மேடத்தை அறிந்து கொள்ளவும் அருகிலிருந்து அவரிடமிருந்து கலந்துரையாடி, கருத்துப் பரிமாற்றம் செய்து, ஒரே அலைவ்ரிசையில் உரையாடும் வாய்ப்பு பெற்றதை, நிச்சயம் வரமாய் உணர்கிறேன். இன்னும் அதிகம் அவருடன் பணிபுரியவும் எல்லையில்லா ஆசை மேலெழுகிறது. தமிழகக் குழந்தைகளின் கல்வி வரலாற்றில் நிச்சயம் அழுத்தமான ஒரு இடத்தைப் பிடித்துள்ள ஆளுமை அவர்.
ஒரு விதை மிக ஆழமாக ஊன்றப்பட்டுள்ளதை அறிகிறேன். வேர்பரப்பவும் நிழல் தரவும் வளரும் நாளை எதிர்நோக்குகின்றேன்.
வாழ்த்துக்கள் தோழர்களே!!!
===================================
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
வெள்ளிப் பனி மலையின் மீதுலவுவோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம் நாங்கள் தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம்

September 14, 2015

கேலண்டரும், ஒற்றைப்படை எண்களும்...

AQAD.IN என்னும் ஒரு வலைதளம் உள்ளது. அதில் தங்களின் பிள்ளையின் பெயரையோ அல்லது நீங்கள் ஆசிரியராக இருந்தால் உங்களின் பெயரையோ பதிவு செய்து வைத்துக்கொண்டால் தினமும் ஓரிரு கேள்விகள் உங்களின் தொலைபேசிக்கு வந்து சேரும். ஆங்கிலம், அறிவியல், கணிதம், வரலாறு, பகுத்தறிதல் எனப் பலதரப்பட்ட கேள்விகள். மிகவும் பயனுள்ள ஒரு வலைதளம் உபயோகித்துப் பாருங்கள்.




இன்று அந்த வலைதளத்தில் எந்த மாதத்தில் 28 நாட்கள் உண்டு எனக் கேட்டிருந்தார்கள். அதனை ஒமருக்கு விளக்குவதற்காக ஒரு யூடியூப் காணொளியை உபயோகிக்கும்போது மேலும் சில பாடங்களுக்கு வழி வகுத்தது. ஒற்றைப்படை எண்கள், இரட்டைப்படை எண்களைப் பற்றியும் படித்தோம்.



அதை விளக்குவது வெகு எளிதாக இருந்தது. 10 கொண்டைக்கடலைகளைத் தந்து, ஒவ்வொரு எண்ணையும் அந்த கடலைகளைக் கொண்டு எனக்கும் அவனுக்கும் இடையில் பிரிக்கச் சொன்னேன். எப்பொழுது முழு கடலையாக யாருக்கும் கிடைக்காமல் ஒன்று மிஞ்சுகிறதோ அந்த எண் ஒற்றைப்படையாகும் என்றேன். மிகவும் எளிதாகப் புரிந்து விட்டது அவனுக்கு. அதன் பின் ஈரிலக்க எண்ணாக இருந்தாலும் சரி, இல்லை அதை விடப் பெரிய எண்ணாக இருந்தாலும் சரி, இறுதியில் இருக்கும் ஒற்றை இலக்கத்தின் மீதே அவனின் கவனம் இருக்க வேண்டும் என்றும் கற்றுத் தந்தேன். இறுதியில் பூஜ்ஜியம் மட்டுமே மிஞ்சினால், அதனை 10ஆக எடுத்துக்கொண்டு செயல்பட சொல்லித்தந்தேன். நிமிடங்களில் அவனுக்கு அது இனிமையான பாடமாகி விட்டது.












க்ஹைர்.... நாங்கள் பார்த்து கலந்தாய்வு செய்த காணொளியும் மிகவும் எளிமையான விதத்தில் ‘காலண்டர்’இன் வரலாறு குறித்துப் பேசியது. அதனைப் பற்றி பேசும்போது கி.மு, கி.பி போன்றவற்றையும் போகும்போக்கில் ஒமரின் காதில் போட்டு வைக்க முடிந்தது. எல்லாமே அவனுக்கு புரிந்திருக்குமா தெரியவில்லை. 2016 லீப் வருடம் என்பதால் அந்த வருட ஃபிப்ரவரியில் இன் ஷா அல்லாஹ் நினைவிருந்தால் மீண்டும் இந்தப் பாடத்தை அலச எண்ணுகின்றேன்.


எண் கணித விளையாட்டு

ஒமர் முன்னர் படித்துக்கொண்டிருந்த மாண்டெஸ்ஸரியில் கணிதத்திற்காக NCHRT புத்தகங்களை உபயோகிக்கிறார்கள். திடீரென நான் மீண்டும் வீட்டுக்கல்வியை ஆரம்பித்ததால், அதே புத்தகங்களை தொடர்ந்து கொண்டுள்ளேன்.

இதில் படம் ஒன்றில் கொடுக்கப்பட்டுள்ள கணித விளையாட்டு, அவனின் புத்தகத்தில் இருந்ததைத் தழுவி வரையப்பட்டது. பார்த்தாலே புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிதான விளையாட்டுதான். கணிதத்தில் கழித்தலும், கூட்டலும் சொல்லித்தர, நன்கு பழக்க இது தகுந்த புத்தகமாக உள்ளது. படிப்பு, வாசிப்பு, கதை, கவிதை என எல்லாவற்றிலும் மிகுந்த ஆர்வமும் ஆற்றலும் உள்ள ஒமருக்கு கணிதம் என்பது என்னைப்போலவே கொஞ்சம் கசக்கத்தான் செய்கின்றது. எனினும் அவனுக்கு பிடிக்கும்படி அதனை மாற்ற வேண்டும், இலகுவான பாடமாய் அவனுக்கு உணர வைக்க வேண்டும் என கொஞ்சம் மெத்தனப்படத்தான் செய்கின்றேன். அதனால்தான் இந்த விளையாட்டும்.



ஒரு ஏணி போன்றோ, பாம்பைப் போன்றோ படத்தை வரைந்து அதன் நடுவில் கட்டங்கள் இட்டு, எதோ ஒரு எண்ணில் இருந்து ஆரம்பித்து அந்தப் படத்தின் முடிவு வரை தொடருங்கள். பிறகு இரண்டு அல்லது மூன்று நபர்களை அந்தப் படத்துடன் சம்பந்தப்படுத்தி, கேள்விகளை அமையுங்கள். 5 கேள்விகளுக்கு மேல் வேண்டாம். ஒவ்வொரு நபருக்கும் நடுவில் 2 அல்லது 3 எண் வித்தியாசம் வருவது போல அமைப்பதும், ஒரு நம்பரையேனும் எளிய எண்ணாக, 2 அல்லது 5 போன்று வடிவமைப்பதும் இலகுவைத் தரும். வீட்டில், வார இறுதிகளில் கூட செய்து பாருங்கள்.






September 11, 2015

ஒமரின் வலைப்பூ........

என்னாங்கப்பூ.... இந்த வயசிலேயே வலைப்பூவா என நீங்கள் கேட்பது புரியுது சகோஸ்.... ஆனால் இது நம்மை மாதிரி மொக்கை வலைப்பூ இல்லை... ஹ ஹா.... ஒமரின் கதைகள், கவிதைகள் எனப் பலதையும் பதிவேற்றி வைக்க ஓரிடம்.

போன வருடம் ஒமர் ஒரு கதை எழுதி, அதனை ராபின் ஏஜ் பத்திரிக்கைக்கும் அனுப்பி, அது பதிவானது. அதைப் பற்றி இங்கே எழுத மறந்து விட்டேன். ஆனால் முகநூலில் எழுதியிருந்தேன். அதன் பின் இப்போது வலைப்பூவில் எழுதுவது அவனுக்கு ஒரு ஊக்கத்தை தருகிறது, மகிழ்வையும். எனவே ஆரம்பித்து தந்தாயிற்று.

Omar's Stories link -- > https://omarstories.wordpress.com/

நேரம் இருப்பின் ஒரு எட்டு இங்கேயும் விசிட் செய்து வையுங்கள் சகோஸ்.... மிக்க நன்றி :) :) :)