வைரம் மட்டுமே மற்றொரு வைரத்தை அறுக்கவோ, அதை செதுக்கவோ அதன் மூலம் மின்ன வைக்கவோ முடியும். இந்த தொடரில் நாம் நம் சமுதாயத்தில் மின்னிய இன்னும் மின்னிக் கொண்டிருக்கின்ற வைரங்களையும் அவர்களை வைரங்களாக்குவதில் தன் வாழ்வையே அர்ப்பணித்த தாய் எனும் வைரங்களையும் பார்க்க போகின்றோம், இன்ஷா அல்லாஹ்.
மீண்டும் கூறுகின்றேன், இது தாய்க்கு மட்டுமல்ல. தந்தைமார்களும் தங்களால் முடிந்த அளவு குழந்தைகளை நல்வழியில் வளர்க்க பொறுப்பேற்க வேண்டும். சரி, இனி முதல் வைரத்தை பார்க்கலாம். எந்த வித அளவுகோல்களைக் கொண்டும் நான் இவர்களை ஒன்று, இரண்டு என்று வரிசைப் படுத்தவில்லை. ஞாபக்த்தில் வருவதைக் கொண்டும், வலையில் ஆதாரம் கிட்டுவதைக் கொண்டுமே நான் வரிசைப் படுத்தியுள்ளேன். ஏதேனும் தவறிருந்தால், தயவு செய்து சுட்டிக் காட்டவும். நன்றி.
மதீனாவின் பழைய காலம் அது. எங்கெங்கு நோக்கினும் ஹதீத்களையும் குர்'ஆனையும் படிக்கவும், மனப்பாடம் செய்யவும், அதை ஆராய்ந்து அறியவும், அதன் மூலம் பல துறைகளில் அறிவை வளர்த்தவும் என ஆலிம்களாலும், தாபயீன்களாலும், சில சஹாபாக்களாலும் மதீனாவின் தெருக்கள் நிறைந்திருந்த காலம் அது. அத் தெருக்களின் வழியே அச்சிறுவன் சென்று கொண்டிருந்தான். புறாக்களை துரத்துவதிலும், பாடித் திரியும் நாடோடிகளை பின் தொடரவுமே அவனின் நேரம் சரியாக இருந்தது. அதனால் அவன் படிக்கவில்லை என்றில்லை, என்றாலும் கல்விக்கும், ஞானத்திற்கும் புகழ் பெற்ற அந்த குடும்பத்தில் இச் சிறுவனைப் பற்றிய கவலை தொடர்கதையானது.
தந்தைக்கு மிகவும் வருத்தமாக இருப்பினும், நல்வழியிலேயே அச்சிறுவனை நேர்வழியில் கொண்டு வர நினைத்தார். எனவே ஓர் நாள், ஓர் போட்டி வைத்தார், அச் சிறுவனும் அவனின் அண்ணனும் அதில் பங்கு பெற்றனர். அச் சிறுவனின் தந்தை ஓர் கேள்வியை கேட்டார். அச் சிறுவன் தவறான பதிலை கூறினான், அவனின் அண்ணன் சரியான விடையை கூறினார். தந்தை அச் சிறுவனைப் பார்த்து கூறினார்,
"பறவைகளிடத்தில் நீ செலுத்தும் நேரம் உன்னை கல்வியிலிருந்து தூரமாக்கி விட்டது என்றே எண்ணுகின்றேன்".
சிறுவன் வெட்கி தலை குனிந்தான், பின் கூறினான்.
"நான் இந்த படிப்பிலெல்லாம் கவனம் செலுத்தப் போவதில்லை. நானும் பிரபல பாடகனாக போகின்றேன்".
அச்சிறுவனின் தாய் கூறினார்,
"நல்ல குரல்வளம் இல்லையென்றால் நல்ல களையான முகமிருந்தும் பலனில்லை"
சிறுவன் மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்தான். என்ன செய்ய? அத் தாய் கூறினார்,
"இசை உன்னை உயர கொண்டு செல்லாவிட்டாலும் ஞானம் உன்னை வெகு உயரத்தில் கொண்டு சேர்க்கும்"
மறுநாள் அத்தாய், அக்காலத்தில் ஆலிம்களும் அவர்தம் மாணவர்களும் உடுத்தும் உடைகளைப் போன்ற உடைகளை கொண்டு வந்தார். அதை கண்டவுடன் அச் சிறுவன், மிகவும் மகிழ்ச்சியடைந்து எப்படி படிக்க போவது, எப்படி ஞானத்தை தேடுவது என்று கேட்டான். அத்தாய் அந்த உடைகளை அச்சிறுவனுக்கு உடுத்தி பின்னர் கூறினார்.
"ராபியா என்னும் ஆசிரியரிடம் போய் சேர்வாயாக. ஆனால், அவரிடமிருந்து கல்வி கற்கும் முன்னர் அவரின் அதபை (ஒழுக்கங்களை) கற்பாயாக!
என்று கூறினார். அத்தாய் சரியான நேரத்தில் பக்குவப் படுத்தி கல்வி கற்க அனுப்பிய அச் சிறுவனே இன்று ஹதீதுகளின் விஷயத்தில் நட்சத்திரமாய் மின்னுபவர் என அவரின் மாணவர்களால் புகழப்பட்ட, இன்றும் புகழப்படுகின்ற இமாம் மாலிக்.
பாடம்:
1. குழந்தைகளை நேர்வழிப்படுத்த வன்முறையை உபயோகப் படுத்தாதீர். அன்பாய், பக்குவமாய் அவர்களை அணுகுங்கள்.
2. குழந்தையின் ஆசிரியர் விஷயத்தில் கவனமாய் இருங்கள். ஞானம் மட்டும் ஒரு மனிதனை முழுமைப் படுத்தாது, அவனின் ஒழுக்கங்களே அவனைப் பற்றி காலாகாலத்திற்கும் பேசும். எனவே ஒழுக்கத்தில் சிறந்த மனிதரையே ஆசிரியராக தேர்ந்தெடுங்கள். அவர் மற்றவர்களைவிடவும் ஞானத்தில் குறைந்தவராக இருப்பினும் சரி.
3. சரியான நேரத்தில் பக்குவப் படுத்துவதே அவர்களின் வாழ்வில் இறுதி வரை கை கொடுக்கும். குழந்தைதானே, வளர்ந்தபின் சரி செய்து கொள்ளலாம் என அப்பொழுதும் எண்ணாதீர்கள். பின் சமயமே கிட்டாது.
இன்னும் பல வைரங்களை பார்க்கலாம்.
மீண்டும் சந்திப்போம்.
அதுவரை தேவை து'ஆ.
வஸ்ஸலாம்.
assalamu alaikkum
ReplyDeleteazakai thohukkum ungkalukku jazakkillahu hair
wa alaykum as salam brother Taj,
ReplyDeletewa Iyyakum for your du'a.