December 25, 2015

‪குழந்தைநேயப்பள்ளிகள்‬ - ஒரு கலந்துரையாடல்

கடந்த நவம்பர் இறுதியில் ‘குழந்தை நேயப் பள்ளிகள்’ மண்டலக் கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் சுடரொளி மேடம் அழைத்திருந்தாலும், கடும் மழை காரணமாக என்னால் அதில் பங்கெடுக்க இயலவில்லை. அதன் பின் வந்த நாட்களிலும் மழையே செய்தித்தாள்களிலும், நிகழ்வுகளிலும் மிகுந்த முக்கியமான இடத்தை பிடித்துக்கொண்டது. அவருடன் மீண்டும் பேசும் வாய்ப்பும் நேரமும் அமையவேயில்லை. எனவே இம்முறை நடக்கும் கூட்டத்தில் பங்கெடுக்கும்படி அழைப்பு வந்ததும், எப்படியேனும் கலந்துகொள்ளவேண்டும் என்னும் உத்வேகம் தொற்றி இருந்தது.
ஒரு பள்ளியை, சமூகத்தின் அனைத்து அடுக்குகளிலிருந்தும் வரும் பிள்ளைகளுக்கு பிடித்தமானதாக, உவப்பானதாக, பயனுடையதாக, அவர்களின் கற்றலார்வத்திற்கு பாதை அமைத்துத் தரும் வெளியாக எப்படி மாற்றுவது. இந்த நோக்கத்தில் கற்பித்தலை, உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் எப்படி அணுகுவது போன்ற கருத்துக்களை அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மனதில் விதைப்பதும், அதன் வெளிப்பாடுகளை சரியான கோணத்தில் கொண்டு செல்வதற்காகவும் 2009இல் சில அரசு ஆசிரியர்களாலும், குழந்தைகளின் கல்வி மேல் அக்கறை கொண்ட ஆர்வலர்களாலும் தொடங்கப்பட்டதே இந்த ‘குழந்தைகளைக் கொண்டாடுவோம்’அமைப்பு.
பல்வேறு களங்களிலும், தளங்களிலும், சூழல்களிலும் கடந்த ஆறூ வருடமாகக் கடந்து வந்த பாதையை சற்றே ஆசுவாசத்துடன் திரும்பிப் பார்ப்பதே இன்றைய கூட்டத்தின் நோக்கமாக இருந்தது. இதற்கும் எனக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா. இருக்கின்றது.
ஏன் HomeSchooling / வீட்டுக்கல்வியை நான் தேர்ந்தெடுக்க வேண்டும், காரணங்கள் என்ன. ஒட்டு மொத்த உலகமும் மறுபேச்சு பேசாமல் தத்தம் குழந்தைகளை தங்களின் வசதிக்கேற்ப ஒரு பள்ளியில் சேர்க்கும்போது, பள்ளிக்கூடத்திற்கே எனக்கு அனுப்ப மனமில்லை என முடிவெடுக்க காரணம் என்ன என்னும் கோணத்தில் பேசுவதற்காக என்னை அழைத்திருந்தார்கள். ஐந்து நிமிட அறிமுகம் மட்டுமே இது என்றாலும் அங்கு வந்திருந்த அத்தனை ஆசிரியர்களிடமும் ஒரு அவநம்பிக்கை கலந்த ஆச்சரியத்தைக் காண முடிந்தது. நேரமின்மையின் காரணமாக ஒரு சுருக்கமான உரையுடன் முடித்துக் கொண்டேன். இன் ஷா அல்லாஹ், இன்னும் விரிவாக புரிய வைக்க ஒரு வாய்ப்பை எதிர்நோக்குகின்றேன்.
என் பயணத்தினை விடவும், இந்த அவசர, இயந்திர உலகில் இன்னும் குழந்தைகளின் மென்மையான, மிக மெதுவாக நகரும் உலகத்தினுள் கலந்து அவர்களை, அவர்களின் விருப்பப்படி, அவர்களின் உவப்பை நாடி கற்பிக்கும் ஆசிரிய ஆசிரியைகள் இருபதிற்கும் மேலாக வந்திருந்தார்கள். ஒவ்வொருவரின் பயணமும், பார்வையும், அவர்கள் எடுக்கும் சிரமங்களும், நிர்ப்பந்தங்களுக்கும், சூழ்நிலைக் கைதுகளுக்கும் நடுவிலும் தன்னால் இயன்ற அளவிற்கு Child friendly school ஆக தங்கள் பள்ளியை மாற்ற அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளையும், அதன் வெற்றி தோல்விகளையும் கலந்தாய்வு செய்ததும், விடுமுறை நாட்களையும் இதற்கென ஒதுக்கிட முன்வந்ததையும் பார்த்து உண்மையில் மகிழ்கிறேன். எதிர்காலத்தை நமபகமான கைகளில்தான் ஒப்படைக்க இருக்கிறோம் என.
ஒவ்வொரு ஆசிரியரும் சொன்ன விடயங்கள், கருத்துக்கள், ஆலோசனைகள், குறைகள் என எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, எந்தப் பள்ளியில் பயிற்றூவிக்கும் ஆசிரியரும் இன்னும் மாறுபட்ட, பண்பட்ட கல்வியை குழந்தைகளுக்கு கொடுக்க இயலும். ஆசிரிய சமுதாயத்திற்கும், குழந்தைகளின் தனித்துவத்திற்கும், அவர்களின் வாழ்க்கைக்கல்விக்கும் இடையே உலகாயுதவாதிகளால், பொருள்முதல்வாதிகளால் ஏற்படுத்தப்பட்ட இடைவெளியை இந்த அமைப்பும், அதன் சேவைகளும் நிரப்பும் என நம்பிக்கை கொள்கிறேன்.
இரண்டு ஹைலைட்ஸ் :
எல்லோரின் அறிமுகமும் முடியும் வேளையில் கூடியிருந்தவர் அனைவர் சார்பாகவும், எனக்கு மீலாத் நபி வாழ்த்துக்களைச் சொன்ன ஆசிரியை... smile emoticon smile emoticon smile emoticon
கூட்டம் முடியும் முன், என் கை பிடித்து, எனக்கு நீங்கள் கூறிய உங்கள் குழந்தையின் இயல்புகள், அவனின் அறீவுப்பசிக்கு தீனி போட இயலாத இயலாமைகள் என எல்லாம் புரிகிறது. என் மகனின் விஷயத்திலும் இதையே நானும் சந்தித்துள்ளேன். ஆனாலும் பள்ளியிலிருந்து நிறுத்தும் தைரியம் இருக்கவில்லை. நீங்கள் முன்னேறுங்கள் எனப் பாராட்டிய ஆசிரியை... smile emoticon smile emoticon smile emoticon
இவையெல்லாவற்றையும் விட, வீடு திரும்பும் வழி முழுதும் என்னுடனேயே பயணித்த தோழர்.மலர்விழி மேடத்தை அறிந்து கொள்ளவும் அருகிலிருந்து அவரிடமிருந்து கலந்துரையாடி, கருத்துப் பரிமாற்றம் செய்து, ஒரே அலைவ்ரிசையில் உரையாடும் வாய்ப்பு பெற்றதை, நிச்சயம் வரமாய் உணர்கிறேன். இன்னும் அதிகம் அவருடன் பணிபுரியவும் எல்லையில்லா ஆசை மேலெழுகிறது. தமிழகக் குழந்தைகளின் கல்வி வரலாற்றில் நிச்சயம் அழுத்தமான ஒரு இடத்தைப் பிடித்துள்ள ஆளுமை அவர்.
ஒரு விதை மிக ஆழமாக ஊன்றப்பட்டுள்ளதை அறிகிறேன். வேர்பரப்பவும் நிழல் தரவும் வளரும் நாளை எதிர்நோக்குகின்றேன்.
வாழ்த்துக்கள் தோழர்களே!!!
===================================
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
வெள்ளிப் பனி மலையின் மீதுலவுவோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம் நாங்கள் தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம்

September 14, 2015

கேலண்டரும், ஒற்றைப்படை எண்களும்...

AQAD.IN என்னும் ஒரு வலைதளம் உள்ளது. அதில் தங்களின் பிள்ளையின் பெயரையோ அல்லது நீங்கள் ஆசிரியராக இருந்தால் உங்களின் பெயரையோ பதிவு செய்து வைத்துக்கொண்டால் தினமும் ஓரிரு கேள்விகள் உங்களின் தொலைபேசிக்கு வந்து சேரும். ஆங்கிலம், அறிவியல், கணிதம், வரலாறு, பகுத்தறிதல் எனப் பலதரப்பட்ட கேள்விகள். மிகவும் பயனுள்ள ஒரு வலைதளம் உபயோகித்துப் பாருங்கள்.




இன்று அந்த வலைதளத்தில் எந்த மாதத்தில் 28 நாட்கள் உண்டு எனக் கேட்டிருந்தார்கள். அதனை ஒமருக்கு விளக்குவதற்காக ஒரு யூடியூப் காணொளியை உபயோகிக்கும்போது மேலும் சில பாடங்களுக்கு வழி வகுத்தது. ஒற்றைப்படை எண்கள், இரட்டைப்படை எண்களைப் பற்றியும் படித்தோம்.



அதை விளக்குவது வெகு எளிதாக இருந்தது. 10 கொண்டைக்கடலைகளைத் தந்து, ஒவ்வொரு எண்ணையும் அந்த கடலைகளைக் கொண்டு எனக்கும் அவனுக்கும் இடையில் பிரிக்கச் சொன்னேன். எப்பொழுது முழு கடலையாக யாருக்கும் கிடைக்காமல் ஒன்று மிஞ்சுகிறதோ அந்த எண் ஒற்றைப்படையாகும் என்றேன். மிகவும் எளிதாகப் புரிந்து விட்டது அவனுக்கு. அதன் பின் ஈரிலக்க எண்ணாக இருந்தாலும் சரி, இல்லை அதை விடப் பெரிய எண்ணாக இருந்தாலும் சரி, இறுதியில் இருக்கும் ஒற்றை இலக்கத்தின் மீதே அவனின் கவனம் இருக்க வேண்டும் என்றும் கற்றுத் தந்தேன். இறுதியில் பூஜ்ஜியம் மட்டுமே மிஞ்சினால், அதனை 10ஆக எடுத்துக்கொண்டு செயல்பட சொல்லித்தந்தேன். நிமிடங்களில் அவனுக்கு அது இனிமையான பாடமாகி விட்டது.












க்ஹைர்.... நாங்கள் பார்த்து கலந்தாய்வு செய்த காணொளியும் மிகவும் எளிமையான விதத்தில் ‘காலண்டர்’இன் வரலாறு குறித்துப் பேசியது. அதனைப் பற்றி பேசும்போது கி.மு, கி.பி போன்றவற்றையும் போகும்போக்கில் ஒமரின் காதில் போட்டு வைக்க முடிந்தது. எல்லாமே அவனுக்கு புரிந்திருக்குமா தெரியவில்லை. 2016 லீப் வருடம் என்பதால் அந்த வருட ஃபிப்ரவரியில் இன் ஷா அல்லாஹ் நினைவிருந்தால் மீண்டும் இந்தப் பாடத்தை அலச எண்ணுகின்றேன்.


எண் கணித விளையாட்டு

ஒமர் முன்னர் படித்துக்கொண்டிருந்த மாண்டெஸ்ஸரியில் கணிதத்திற்காக NCHRT புத்தகங்களை உபயோகிக்கிறார்கள். திடீரென நான் மீண்டும் வீட்டுக்கல்வியை ஆரம்பித்ததால், அதே புத்தகங்களை தொடர்ந்து கொண்டுள்ளேன்.

இதில் படம் ஒன்றில் கொடுக்கப்பட்டுள்ள கணித விளையாட்டு, அவனின் புத்தகத்தில் இருந்ததைத் தழுவி வரையப்பட்டது. பார்த்தாலே புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிதான விளையாட்டுதான். கணிதத்தில் கழித்தலும், கூட்டலும் சொல்லித்தர, நன்கு பழக்க இது தகுந்த புத்தகமாக உள்ளது. படிப்பு, வாசிப்பு, கதை, கவிதை என எல்லாவற்றிலும் மிகுந்த ஆர்வமும் ஆற்றலும் உள்ள ஒமருக்கு கணிதம் என்பது என்னைப்போலவே கொஞ்சம் கசக்கத்தான் செய்கின்றது. எனினும் அவனுக்கு பிடிக்கும்படி அதனை மாற்ற வேண்டும், இலகுவான பாடமாய் அவனுக்கு உணர வைக்க வேண்டும் என கொஞ்சம் மெத்தனப்படத்தான் செய்கின்றேன். அதனால்தான் இந்த விளையாட்டும்.



ஒரு ஏணி போன்றோ, பாம்பைப் போன்றோ படத்தை வரைந்து அதன் நடுவில் கட்டங்கள் இட்டு, எதோ ஒரு எண்ணில் இருந்து ஆரம்பித்து அந்தப் படத்தின் முடிவு வரை தொடருங்கள். பிறகு இரண்டு அல்லது மூன்று நபர்களை அந்தப் படத்துடன் சம்பந்தப்படுத்தி, கேள்விகளை அமையுங்கள். 5 கேள்விகளுக்கு மேல் வேண்டாம். ஒவ்வொரு நபருக்கும் நடுவில் 2 அல்லது 3 எண் வித்தியாசம் வருவது போல அமைப்பதும், ஒரு நம்பரையேனும் எளிய எண்ணாக, 2 அல்லது 5 போன்று வடிவமைப்பதும் இலகுவைத் தரும். வீட்டில், வார இறுதிகளில் கூட செய்து பாருங்கள்.






September 11, 2015

ஒமரின் வலைப்பூ........

என்னாங்கப்பூ.... இந்த வயசிலேயே வலைப்பூவா என நீங்கள் கேட்பது புரியுது சகோஸ்.... ஆனால் இது நம்மை மாதிரி மொக்கை வலைப்பூ இல்லை... ஹ ஹா.... ஒமரின் கதைகள், கவிதைகள் எனப் பலதையும் பதிவேற்றி வைக்க ஓரிடம்.

போன வருடம் ஒமர் ஒரு கதை எழுதி, அதனை ராபின் ஏஜ் பத்திரிக்கைக்கும் அனுப்பி, அது பதிவானது. அதைப் பற்றி இங்கே எழுத மறந்து விட்டேன். ஆனால் முகநூலில் எழுதியிருந்தேன். அதன் பின் இப்போது வலைப்பூவில் எழுதுவது அவனுக்கு ஒரு ஊக்கத்தை தருகிறது, மகிழ்வையும். எனவே ஆரம்பித்து தந்தாயிற்று.

Omar's Stories link -- > https://omarstories.wordpress.com/

நேரம் இருப்பின் ஒரு எட்டு இங்கேயும் விசிட் செய்து வையுங்கள் சகோஸ்.... மிக்க நன்றி :) :) :)


September 07, 2015

மீண்டும் நாங்கள்..... :) :)

சகோஸ்....

எல்லோரும் நலமா???

பல வருடங்களுக்குப் பின் மீண்டும் வீட்டுக்கல்வியை ஆரம்பித்துள்ளேன். ஜுஜ்ஜுவுடன் தான் :) :)

அவர் மூன்றாம் வகுப்பில் படித்து வந்தார். பின் இப்போது என்னுடன் வீட்டிலேயே கல்வி கற்பதற்காக ஓடோடி வந்து விட்டார். அவருக்கு பின்னுள்ள இருவரும் சென்னையில் ஒரு பிரபல மாண்டெஸ்ஸரியில் படிக்கின்றார்கள். இவரும் அதில்தான் படித்துக்கொண்டிருந்தார். எனினும் இவரின் விருப்பம் என்னிடம் பயில்வதில்தான் அதிகம். எனவே மீண்டும் இனிதே ஆரம்பம். அவ்வப்போது இங்கேயும் எங்கள் நாட்கள் எப்படி செல்கின்றன எனப் பதிந்து வைக்கின்றேன்.


இன் ஷா அல்லாஹ். :) :)

June 30, 2011

ஒரு பறவையின் மரண வாக்குமூலம்.

குழந்தைகள் எந்த விஷயத்தை எபப்டி சிந்திக்கும் என்பதற்கு அளவே இல்லை. இதோ ஜுஜ்ஜூவின் கற்பனைத்திறன் :))

அன்றொரு நாள் மாலையில் ஜுஜ்ஜூவும் அவன் அப்பாவும் Yardஇல் விளையாடி விட்டு வரும்போது ஒரு பறவை இறந்து கிடந்ததை பார்த்தவர்கள் அதை நல்லடக்கம் செய்து விட்டு வந்தார்கள். வந்த பின்:

நான்: ஜுஜ்ஜூ பொப்பொ எங்கே?
ஜுஜ்ஜூ: ம்... பொப்பொ (Bhobbo) செத்துபோச்சு.
நான்: எங்கேம்மா?
ஜுஜ்ஜூ: தோட்டத்துல
நான்: பொப்போ உங்ககிட்ட என்ன சொல்லுச்சு?
ஜுஜ்ஜூ: ஜுஜ்ஜூ Bad boy சொல்லுச்சு.
நான்: ச்ச... சாகறப்ப கூட பொப்பொ உண்மைய சொல்லிட்டு செத்திருக்கு...

அதன் பின் கல கல கல கல தான் :). இன்னொரு நாள் என் தம்பியுடன் ஜுஜ்ஜூ பேசிக்கொண்டிருந்தபோது,

ஜுஜ்ஜூ: மாமா...மாமா... ஜுஜ்ஜூ மஸ்ஜித் போயி, அல்லல்லா ஓதி அல்லாகிட்ட து’ஆ கேட்டேன்.
மாமா: அப்படியா செல்லம்... அல்லாகிட்ட என்ன சொன்னீங்க?
ஜுஜ்ஜூ: அல்லா, அம்மீயோட கால் நல்லா பண்ணு சொல்லி து’ஆ செஞ்சேன். (அப்பொழுது கடும் கால்வலியில் அவனிடம் அடிக்கடி து’ஆ செய்ய சொல்லிக்கொண்டிருந்தேன்)
மாமா: அப்படியா... அல்லா ஜுஜ்ஜூகிட்ட என்ன சொன்னாங்க?
ஜுஜ்ஜூ:...ம்...ம்... அல்லா, யூசூஃப் மாமா Bad boy சொன்னாங்க..
மாமா: அது சரி, அல்லாஹ் மட்டும்தான் என்னை இன்னும் Badboy சொல்லாம இருந்தது. இப்ப அவரும் சொல்லிட்டாரா...

:))))))))))))))))

March 28, 2011

மார்க்கக் கல்வி.

அஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மத்துல்லாஹ்,

இன்றுடன் ஒமர் 10 சூறா / குர்’ஆன் அத்தியாயங்கள் மனனம் செய்து முடித்தாயிற்று. மனதிற்கு மிக மிக சந்தோஷமாக உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் மூன்று வயதாகிவிடும்.  அதற்குள் இவ்வளவு மனனம் செய்துள்ளது அல்ஹம்துலில்லாஹ் (இறைவனுக்கே புகழனைத்தும்) என்பதை தவிர இவ்வேளையில் எதுவும் சொல்லத் தோன்றவில்லை.








இந்த வீடியோக்கள் முன்னமே பதிவு செய்தவை. எனவே அத்தனை சூறாக்களும் இதில் இல்லை. இன்னொருமுறை அனைத்தையும் பதிவு செய்ய முயல்கிறேன், இன்ஷா அல்லாஹ். ஒமருக்காக து’ஆ செய்யவும்.



ஒமருக்கு தெரிந்த சூறாக்கள்
  1. அல் ஃபாத்திஹா
  2. அந் நாஸ்
  3. அல் ஃபலக்
  4. அல் இக்லாஸ்
  5. அல் மஸத்
  6. அந் நஸ்ர்
  7. அல் காஃபிறூன்
  8. அல் கௌஸர்
  9. அல் அஸ்ர்
  10. அல் மா’ஊன்
ஒமருக்கு தெரிந்த து’ஆக்கள்
  • சாப்பிடுவதன் முன்
  • உடையணிவதற்கு முன்
  • வாகனத்தில் போகும்போது
  • றப்பனா ஆத்தினா
  • வீட்டை விட்டு வெளியேறும் முன்
  • தூங்கும் முன்
  • தூங்கி எழுந்ததும்
  • ரெஸ்ட்ரூம் செல்லும் முன் / பின்
இதைத் தவிர முழு பாங்கும் தெரியும். சில சமயங்களில் இங்குள்ள மஸ்ஜிதில்
பாங்கும் கூறுவதுண்டு. தன் தந்தையுடன் போகும்போது தொழுகை முழுவதும் இமாம் ஜமா’அத்துடன் விட்டு விலகாமல் தொழுவதுமுண்டு (ஒன்றிரண்டு தடவை தவிர!!! )

இப்ப, பிரேக் .... :))




.

March 22, 2011

தமிழ் புத்தகம்

இரண்டு வாரமாய் தமிழ் எழுத்துக்களை காண்பித்து பழக்க தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக்கொண்டே இருக்கிறேன். இறுதியில் தமிழ் பழக்க ஒரு வலைதளம் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்(இறைவனுக்கே புகழனைத்தும்). ஆங்கில வலைதளம் போல இல்லை என்றாலும், கிடைத்ததே மிக சந்தோஷமாக உள்ளது. இன்னும் வலைதளங்கள் தெரிந்தால் கூறவும்.


தமிழுக்கு, கூகிளின் பட உதவியுடன் ஒரு சிறு புத்தகம், நாங்கள் உபயோகிக்க என்று உருவாக்கிக் கொண்டுள்ளேன். ஹி ஹி :) அல்ஹம்துலில்லாஹ் (இறைவனுக்கே புகழனைத்தும்). தங்களுக்கும் பயன் தரும் என்றால் உபயோகித்துக் கொள்ளவும். இதை வணிக ரீதியாக உபயோகிக்க இயலாது /  கூடாது. வீட்டில் குழந்தைக்கு உபயோகிக்க மட்டுமே. ஏனெனில் அதிலுள்ள படங்கள் காப்புரிமை பெற்றதாக இருக்கலாம். என்னுடைய உழைப்பும் அதில் உள்ளது. எனவே எச்சரிக்கை. :)

யாரேனும் ஒரு அழகிய தமிழ் புத்தகத்தை ஸ்கேன் செய்து அனுப்பினாலும் சந்தோஷமே :) இறைவன் நற்கூலியை தங்களுக்கு தந்தருள்வானாக.:)













.

January 26, 2011

வீட்டுக்கல்வியின் தேவை -- Reasons why you should Home School


ஜுஜ்ஜுவின் வளர்ச்சி

அல்ஹம்துலில்லாஹ். மீண்டும் வலையில் எழுத ஆரம்பித்ததில் மகிழ்ச்சியே. இன்னொரு செல்வத்தின் வருகயை ஒட்டி என்னால் சில காலம் எழுத முடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும். புதிய நபர், இப்றாஹீம் முஹம்மது அப்துர் ரஹீமிற்கு து’ஆ செய்யவும்.


ஜுஜ்ஜு தினம் தினம் இன்னும் அதிகம் கற்றுக்கொள்கிறான். ஆனால் அவனின் அறிவுப்பசிக்கு அந்த வேகத்தில் தீனியிட முடிவதில்லை சில நேரம், கைப்பிள்ளையையும் கவனிக்க வேண்டி இருப்பதால். து’ஆ செய்யவும்.

gudli.com மற்றும்  starfall.com  மட்டுமே அவனுக்கு நாள்தோறும் நிறைய பழக, படிக்க கற்றுத்தருகிறது. அவனின் கற்கும் வேகமும் அதிகம். மகிழ்ச்சியாய் உள்ளது அவனின் அறிவை கண்டு, அதே நேரம் சிறு பிள்ள என்னும் பருவம் வேகமாய் மறைகிறதே என்றும் கவலை. அல்லாஹு த ஆலா போதுமானவன்.

போன வாரம் முதல் அவனின் வளர்ச்சியை குறித்து வைக்க ஆரம்பித்துள்ளேன். ஆங்கிலம், தமிழ், அரபி ஆகிய மூன்றிலும் அத்தனை எழுத்துக்களும் நன்றாய் தெரிகிறது. ஆங்கில எண்களும் கிட்டத்தட்ட 50 வரை சொல்லுகிறான். விளையாட்டாகவே இத்தனையும் கற்றுக்கொண்டது சந்தோஷமே. போன வாரம் அவனின் வளர்ச்சியை ரெக்கார்டு செய்து வைக்கும் விதமாக சில வேலைகளை சேர்ந்து செய்தோம். அதன் புக்கைப்படங்கள் கீழே. து’ஆ செய்யுங்கள். புகைப்படங்களைக் கண்டு ஏதேனும் ஐடியா தேவைப்பட்டாலோ, கேள்வி இருந்தாலோ, உங்கள் குழந்தையிடமும் இப்படி செய்து பார்க்கவேண்டி இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

 A - Z வரை அவனின் கார்கள் கொண்டு ஜோடித்து பார்த்தோம்.  

ஒரு வீட்டை வரைந்து அதனை சுற்ரி பல்வேறு கலரில் நான் பொருட்களை வரைந்தால் அந்தந்த கலர் ஸ்கெட்சை கொண்டு கோடிட வேண்டும்.
ஒன்றிரண்டை தவிர மற்றதெல்லாம் அவனே சத்தமாக அந்த நிறத்தின் பெயரை கூறி கோடுகள் இட்டான்.

 A, B, C, D எல்லா எழுத்துக்களையும்  UPPER CASE மேலேயும், LOWER CASE  கீழேயும் எழுதினால் அந்தந்த எழுத்துக்களுடன் சரியாக இணைக்க வேண்டும்.

அதையும் எல்லா 26 எழுத்துக்களுக்கும் சரியாக செய்தான். 
பின்னர் எனக்கு தெரிந்த கலையை கொண்டு நான் ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு பொருளை வரைந்து அவை என்ன என்ன என்று கூறிய பின் அதையும் சரியாக இணைத்தான்.
பின்னர் Play Dough  கொண்டு சில பொருட்களை செய்தோம். அதுவும் அவனுக்கு பிடித்து போனது.


இனி அடுத்த வாரம் மற்ற மொழிகளையும் சோதித்து பார்க்க வேண்டும். அதுவரை, தேவை து’ஆ.

வ ஸலாம்.


November 15, 2010

ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களும், சிந்தனைக்கு ஒன்றும்...!

அஸ் ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ் இனிய சகோதர சகோதரிகளே..,



எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். இன்ஷா அல்லாஹ் ஹாஜிகள் எல்லோரும் தத்தம் கடமை முடித்து ஊர் திரும்பும் நேரம் இது. நானும் என் பெற்றோரின் நலமுடன் கூடிய  வருகைக்கு காத்திருக்கிறேன். கடந்த சில தினங்களாக பதிவெதுவும் எழுத முடியாத சூழ்நிலை. இன்ஷா அல்லாஹ், ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் சந்திக்கிறேன். அதுவரை வல்ல றஹ்மானிடம் நம் அனைவருக்காகவும் து’ஆ செய்யுங்கள். து’ஆ எந்த அளவு வலுவானதாக, உள்ளத்தில் எத்தகைய அச்சத்துடன் வர வேண்டும் என்பதற்காக ஒரு சின்ன வரைபடம் கீழே. அதை விவரிக்க வேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கிறேன், இன்ஷா அல்லாஹ். மற்றவை, இடைவேளைக்கு பிறகு. வ ஸலாம்.




.

November 01, 2010

உதவிக் கரங்களை எதிர்பார்த்து...

புற்றுநோயோடு போராடும் ஐந்து வயது பிஞ்சுக்கு உதவ முன் வாருங்கள்! print Email
உதவிக் கரங்கள் - உதவிக் கரங்கள்
திங்கள், 01 நவம்பர் 2010 21:36
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரத்தில், ஓரியண்ட் இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் பயிலும் அபூபக்கர் என்ற படத்திலுள்ள ஐந்து வயதுள்ள மாணவன் முதலாம் வகுப்பு பயின்று வருகிறான்.

பள்ளியில் சக மாணவர்களுடனுடன் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கையில் இவனால் மட்டும் திடீரென முடியாமல் போனது. காரணம் அறிய மருத்துவரை நாடி பரிசோதனைகளை மேற்கொண்டபோதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் வெளியானது. சிறுவன் அபூபக்கரின் வயிற்றுப் பகுதியில் புற்றுநோய் கட்டி (கேன்சர்) வளர்ந்து கொண்டு இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மருத்துவர்களின் அறிவுரைப்படி இந்த கேன்சரை அறுவை சிகிச்சை மூலம் குணமாக்க இயலாதாம். தொடர்ந்து 2 வருட காலம் தீவிர சிகிச்சை செய்ய வேண்டுமாம். (சுட்டி: மருத்துவர்களின் பரிந்துரை) மிகச் சாதாரண வேலையில் இருந்து கொண்டு, தம்மால் இயன்ற அளவில் சேமித்து ஆங்கிலக் கல்வியில் மகனைச் சேர்த்து படிக்க வைத்துக் கொண்டிருக்கும் மாணவனின் தந்தை சுலைமான் மீளாத் துயரத்திலும், இதனை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களின் உதவிக் கரங்களையும் எதிர்பார்த்தும் உள்ளார்.
வங்கிக் கணக்கு விபரங்கள்:
M. Sulaiman
SBT, Colachel Branch
A/C No : 57059234495
கேன்சர் போன்ற பணக்கார நோய்க்கு 2 வருட காலம் தீவிர சிகிச்சை என்பதும் அது சுலைமான் போன்ற ஏழைகளைப் பொறுத்த மட்டில் எவ்வளவு சிரமம் என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம்.  சிறுவன் அபூபக்கர், உங்களது உதவியை எதிர் நோக்கி இருக்கிறார்.

இங்கே உள்ள வங்கி கணக்கிற்கு உங்களால் இயன்ற உதவியை அனுப்பி வைத்தால், வறுமையில் வாடும் சிறுவனின் குடும்பத்திற்கு மிக்க உதவியாக இருக்கும். இதற்கான நற்கூலிகள் இறைவன் புறத்திலிருந்து உங்களுக்குக் கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்!
உதவியினை உடனடியாக அனுப்ப இயலாதவர்கள் இவ்விஷயத்தை பிறருக்கு உடனடியாக தெரிவியுங்கள். [http://www.satyamargam.com/1569] அத்துடன் இந்த குடும்பத்தினரின் இன்னல்களைப் போக்கிட, குறிப்பாக இந்த சிறுவனுக்காக இறைவனிடத்தில் பிராத்திக்கவும்.

:-சத்தியமார்க்கம்.காம்


. 

October 21, 2010

தாய் எனும் வைரம் --3


அந்த சிறுவனின் வயது இரண்டோ மூன்றோதான். ஆனால் அவனின வருகை, சபையில் உள்ள எல்லோரையும் மகிழ்ச்சியடைய வைக்கும். ஏன்? ஏனெனில் அவனுடைய 'அதப்'(Adaab - குணநலன்க‌ள்) அத்தனை அழகானது. எப்பொழுதும் மரியாதையுடன் எல்லோரையும் அழைப்பதும், அழைப்பிற்கு தாழ்ந்து பதில் சொல்வதும், நம்முடைய அகராதியில் சொல்ல வேண்டுமென்றால் ப்ளீஸ், தேன்க்யூ, மே ஐ?...போன்ற மதிப்பை ஏற்படுத்தும் சொற்களை உபயோகிப்பதும், அடக்கத்தை தன் செயல்களில் காட்டுவதாலும் அச்சிறுவனை ஊரே மெச்சியது. இந்த பாராட்டுக்கெல்லாம் உரிய அந்த சிறுவன் யார், இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹி).

அத்தனை சிறு வயதிலேயே அவர் ஊரே மதிக்கும், மரியாதை தரும், புகழும் சிறுவனாய் திகழ்ந்தது எப்படி? அவரின் நன்னடத்தையால். இமாம் அஹ்மதின் (ரஹி) தாய்க்கு தெரிந்திருந்தது, எல்லா 'இல்மு'க்கும்(அறிவு / ஞானம்) முன்னர் ஒரு குழந்தை கற்க வேண்டியது அதபே!! அதாவது நன்னடத்தையே. எனவே அத்தாயானவர்கள் இமாம் அவர்களுக்கு அதிகமாக குர்'ஆன் ஞானத்தையோ, அல்லது ஹதீத் ஞானத்தையோ அளிக்கவில்லை, மாறாக சாப்பிடும்போது, சபைக்குள் வரும்போது, பெரியவர்களை சந்திக்கும்போது என எல்லா இடங்களிலும் நன்முறையில் நடந்து கொள்வது எப்படி என்பதை நன்முறையிலும் அதிகமாகவும் கற்றுக் கொடுத்தார்.

ஒரு முறை இமாமவர்கள், அவர்களின் மிகச் சிறு வயதில் ஒரு சபையில் இருக்கும்போது ஒரு அரபி, அவரின் நண்பரிடம் கூறினார், நானும் என் குழந்தைகளுக்காக பெரும் பெரும் செலவெல்லாம் செய்து நல்ல நல்ல 'மு'அத்தபீன்'களைக் கொண்டு அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன்...என்றாலும் இந்த சிறுவனை (இமாம் அஹ்மது) போல அவர்களின் குணநலன்கள் இல்லை என்று.

அந்த காலங்களில் அரேபிய வழக்கப்படி 'மு'அத்தபீன்' எனப்படுபவர்களிடம் குழந்தைகளை அனுப்பி பாடம் படிக்க வைப்பதும், அல்லது 'மு'அத்தபீன்'களை வீட்டீலேயே வரவைத்து குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருவதும் பொதுவான ஒரு செயல். யார் இந்த 'மு'அத்தபீன்கள்? 'அதப்' என்னும் வார்த்தையில் இருந்து தோன்றிய பெயரே அது. "அதபை சொல்லித் தருபவர்கள்" அதாவது குழந்தைகளுக்கு நன்னடத்தையையும், நல்ல குணநலன்க‌ளையும் சொல்லித்தருபவர்கள்.

இப்பொழுது புரிந்ததா அந்த அரபியின் வருத்தம். இன்னொன்றையும் உற்று நோக்கினால் புரியும். இமாமவர்கள் ஞானமெல்லாம் கற்று பெரிய இமாம் ஆகும் முன்னர் அவரும் ஒரு 'மு'அத்தபீன்' ஆகவே இருந்தார் என்றால் அது மிகையாகாது. யார்தான் விரும்ப மாட்டார், தன் பிள்ளையின் நற்குணங்களை ஊரே மெச்ச வேண்டும் என?

பற்பல இமாம்களின் சரித்திரத்தை படிக்கும்போது அவர்களின் வாழ்வையும், குணங்களையும், கொள்கைகளையும் கண்டு வியந்து போகிறோம். ஆனால் அதை கற்றுத்தந்த தாய்மார்களைப் பற்றி குறைந்த தகவலே நமக்கு கிட்டுகிறது. இப்படி, அவர்களின் பெயர் சரித்திரத்தில் தத்தம் பிள்ளைகளாலேயே இடம் பெறுகிறது. இங்கும் இமாம் அவர்களின் குணநலஙளில் சீரிய கவனம் செலுத்தியதாலேயே, அவர் ஞானமும் அதிகம் பெற்றார், ஞானமும், நன்னடத்தையும் ஒருங்கே அமைந்ததனால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் அசைக்க இயலா இடத்தை பெற்றார். எனவே தாய்மார்கள் சிந்திக்க வேண்டியது என்ன, உங்களால் மட்டுமே உங்களின் பிள்ளைகளின் வாழ்வை செப்பனிட முடியும். நேரம் வீணாவதன் முன், இன்றே, இப்பொழுதே, அதற்கான வேலைகளில் கவனம் செலுத்துங்கள்.

மீண்டும் சந்திப்போம், இன்ஷா அல்லாஹ்.


.

October 19, 2010

மெயிலில் வந்த சிந்தனை...

அல்ஹம்துலில்லாஹ், இந்த பதிவு இன்று மெயிலில் கிட்டியது. இதை தமிழ்ப்படுத்தும் அளவிற்கு நேரம் இல்லாத காரணத்தால் அப்படியே இடுகிறேன். இது டீவிக்கு மட்டுமல்ல, இன்டெர்னெட்டிற்கும், எல்லா வசதிகளும் கொண்ட மொபைல் ஃபோன்க‌ளுக்கும் கூட பொருந்தும். எது முக்கியம் என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.



A teacher from Primary School asks her students to write an essay about what they would like God to do for them...

At the end of the day while marking the essays, she read one that made her very emotional.
Her husband, that had just walked in saw her crying and asked her:
- What happened?

She answered - Read this. Its one of my students essays.

Oh God, tonight I ask you something very special:
Make me into a television.
I want to take its place. Live like the TV in my house. Have my own special place, and have my family around ME.

To be taken seriously when I talk....
I want to be the Center of attention and be heard without interruptions or questions.

I want to receive the same special care that the TV receives when it is not working.
Have the company of my dad when he arrives home from work, even when he is tired.

And I want my mom to want me when she is sad and upset, instead of ignoring me... and... I want my brothers to fight to be with me... I want to feel that family just leaves everything aside, every now and then, just to spend some time with me.

And last but not least make it that I can make them all happy and entertain them...

God I dont ask you for much... I just want to live like every TV.

At that moment the husband said:  - My God, poor kid. What horrible parents!

She looked up at him and said:  That essay is written by our son!!!

October 15, 2010

ஹஜ் எனும் புனிதப் பயணம்


காட்சி ஒன்று:

* அது ஒரு வனாந்தரம்....புல்லுமில்லை, நீருமில்லை, மக்களுமில்லை, மனிதமும் இல்லை...வெயில் கொளுத்தும் பாலையில் நிழலுக்கும் தாகமெடுக்கும் கோடை. திருமணம் முடித்து குழந்தையும் பிறந்த பின், பச்சை மண்ணையும் அதன் தாயையும் பாலைவன மண்ணில் விட்டுவிட்டு திரும்பியும் பாராமல் நடக்கிறார் கணவன்*...

காட்சி இரண்டு:

* பசித்தது பிள்ளைக்கு, பொட்டலத்தில் இருந்ததும் தீர்ந்து போய் நா வறண்டு அழுத தாய்க்கு உதவி செய்யவோ அல்லது என்னவென்று விசாரிக்கவோ எவரும் இலர். தவமிருந்து பெற்ற தங்கப் பாலகனை தனியே கொதி மணலில் விட்டு விட்டு மலைகளின் நடுவில் ஓட ஆரம்பித்தாள் தாய்**...


காட்சி மூன்று:

* கட்டளை கிடைத்தது கனவில், கொல்லும்படி தன் உயிரினும் மேலான மகனை. பிறந்த சில வருடங்களிலேயே இறைவனுக்காக தாயையும் தந்தையையும் வளர்த்த ஊரையும் பிரிந்த தனயனுக்கு தன் மகனை கொல்லும்படி கனவு வந்ததும் அஞ்சவில்லை, அசரவில்லை, உயிரினும் மேலாய் நேசித்த தன் மகனை தானே பலியிடவும் தயக்கமின்றி புறப்பட்டார் அத் தந்தை*...

காட்சி நான்கு:

* அழைத்தவர் தந்தையானாலும் எதற்கு என்று எதிர்க் கேள்வியில்லை. உன்னை பலியிடவே அழைத்துப் போகிறார், சொன்னது சாத்தான். கேட்டவுடன் புத்தி மாறவில்லை, தந்தையுடன் விவாதம் செய்யவில்லை, மாறாக சாத்தானை கல்லால் அடித்தார் மகன், தந்தையின் பாசத்தை அறிந்தவராதலால் கூறினார் தந்தையிடம் என்னை குப்புற படுக்க வைத்து பலியிடுங்கள் அப்பா... என் முகத்தை பார்த்தீரானால் ஒருக்கால் உங்கள் நெஞ்சம் இளகி இறைவனுக்கு மாறு செய்ய துணிந்து விட்டால்...தன்னையே பலியிட யோசனை கூறியவர் அந்த குடும்பத்தின் அடுத்த தியாகி, மகன்***...

காட்சி ஐந்து:

* யாரை அழைப்பது, யார் வந்து தொழுவர் இந்த ஆலயத்தில், எங்கிருந்து வருவர், எதன் மீதேறி வருவர், என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்காது என் கடன் பணி செய்வதே என ஆலயத்தை எழுப்பினர் தந்தையும் தனயனும், அதன் மீதேறி அழைப்பும் விடுத்தனர், நெஞ்சின் துடிப்பை அறிந்த இறைவன் கூறினான், இந்த அழைப்பினை உலகின் கடைசி மனிதன் வரை நான் கொண்டு செல்வேன்....அவர்கள் யாவரும் வருவர் இங்கே தொழ...இறைவனின் வாக்கு பொய்ப்பதில்லை...


தியாகங்களுக்கு பேர் போன அக்குடும்பத்தினரை அந்தரத்தில் விட்டானா இறைவன்? இல்லையில்லை, அனைவரின் வாழ்விலும் அவர்களைப் போல வாழ்வதும், அவர்களின் வேர்வையில் எழுப்பப்பட்ட இறையில்லத்தை தொழுவதும் எம்மவர் வாழ்வில் கடமையாக்கினான். இதோ அந்த தந்தை, தாய், தனயனின் வாழ்வை, சில காலமேனும் வாழ்ந்து பார்க்கவும், அந்த இறையில்லத்தில் தொழுதிடவும் வேளை வந்துவிட்டது நம்மில் பலருக்கு. என் அம்மியும், அப்பாவும் இவ்வருடம் இந்த புனித பயணத்திற்கு தயாராகிறார்கள் இன்ஷா அல்லாஹ்.

இன்னும் இரண்டு நாட்களில் பயணம், என் உயிர் அங்கிருக்க உடல் மட்டும் கொண்டிங்கு வேதனையுடன் இருக்கின்றேன்....அந்த புனித பயணத்திற்கு வழியனுப்பி வைக்க முடியாத சூழ்னிலை....அந்த பரவசத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை...கண்ணீரும், உற்சாகமும் பீரிடும் அந்த வேளையை கூடவே இருந்து சுவைக்க முடியாத் ஓர் நிலை....எனினும் அம்மி, அப்பா...இருவரிடத்திலும் மீண்டு கூறுகிறேன்...எனது பாக்கியம் நான் தங்களுக்கு பெண்ணாய் பிறந்தது, எனது சுவர்க்கம் தங்களுடன் என் பால்யத்தையும், விவாகம் வரைக்கும் உண்டான காலத்தை கடந்தது, என் வெற்றிகள் அனைத்திற்கும் வேராய் இருந்த தங்களின் ஹஜ் சுகமானதாய் அமையவும், அல்லாஹ்வினிடத்தில் கபூல் செய்யப்படவும், உடலும் மனமும் சுகமாய் நீங்கள் இருவரும் ஊர் திரும்பிடவும், எல்லாம் வல்ல அர் ரஹ்மான் அருள் புரிவானாக. ஆமீன். சகோதரிகளே, சகோதரர்களே...என் தாய் தந்தைக்காகவும், இன்னும் இந்த வருடம் ஹஜ் செய்யும் யாவருக்காகவும் து'ஆ செய்வீர்களாக.
யாவரின் ஹஜ்ஜையும் கபூல் செய்து, எந்த வித அசம்பாவிதங்களும் இன்றி, யா அல்லாஹ் அனைவரையும் திருப்தியுடனும், உடல் மற்றும் மன நலத்துடன் ஹஜ்ஜை முடித்தும் தருவாயாக. ஆமீன். ஆமீன். யாரப்புல் ஆலமீன்.



*கணவன் ‍ நபி இப்றாஹீம் (அலைஹ்)
**தாய் ஹாஜர் அம்மையார்(அலைஹ்)
***மகன் நபி இஸ்மாயீல்(அலைஹ்)

September 28, 2010

தாய் எனும் வைரம் --2

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்.

சென்ற பதிவில் இமாம் மாலிக்(ரஹி) அவர்களின் தாயைப் பற்றி பார்த்தோம். இன்று நாம் பார்க்க இருப்பது இமாம் புகாரி(ரஹி) அவர்களின் தாயைப் பற்றியும், அவரின் விடா முயற்சியும், அல்லாஹ் மீதிருந்த அசையா நம்பிக்கையும். மாஷா அல்லாஹ், இமாம்களைப் பற்றி படிப்பதற்கு முன் அவர்களின் தாயைப் பற்றி தெரிந்து கொள்வது இன்னும் அதிகமான பிரமிப்பை உருவாக்குகின்றது. அவர்களின் அர்ப்பணிப்பை பார்க்கும்போது இன்றைய சூழலில் பிள்ளை பெறுவதையும் வளர்ப்பதையும் பாரமாக நினைக்கும் பெண்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு இஸ்மாயில் இப்னு இப்றாஹீம் அல் புகாரி(ரஹி) அவர்கள் இஸ்மாயீல் என்பவருக்கு மகனாக கி.பி 810இல் (மேற்கு துர்கிஸ்தானில் உள்ள) புகாரா என்னும் ஊரில் ஜும்'ஆ தொழுகைக்கு பின் பிறந்தார்கள் என்றறியப்படுகின்றது. இவர் பிறக்கும்போதே கண் பார்வையில்லாதவராக பிறந்தவர். என்ன? ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆம். உண்மை அதுவே. தந்தையை சிறு பிராயத்திலேயே பறி கொடுத்த இமாமவர்கள் பிறவிக் குருடனாகவும் இருந்தார்கள்.

அந்த காலத்தில் எல்லாம் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் விதவையானாலோ அல்லது தலாக்காகி விட்டாலோ சிறிது நாட்களிலேயே மறுமண வரன்க‌ள் அவர்களை நோக்கி குவியும். இங்கே நான் குறிப்பிடுவது மேல்வர்க்க பெண்களையோ அல்லது செல்வச்சீமாட்டிகளையோ அல்ல. மாறாக அல்லாஹ்வின் பாதையில் தம்மையும் தம்மை சார்ந்தவர்களையும் அர்ப்பணிக்க தயாராக இருந்தவர்கள்.

அந்த கால கட்டத்தில் தன் கணவனை இழந்திருந்த இமாம் புகாரி(ரஹி) அவர்களின் தாய்க்கும் அந்த வாய்ப்புகள் வராமல் இல்லை. மாறாக அவர் வந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்தார். தன் மனதின் ஆசைகளையும் உடல் தேவைகளையும் கட்டுப்படுத்தி தன் குழந்தைகளை சீரும் சிறப்புமாய் இஸ்லாத்தின் மடியில் வளர்ப்பதிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அத்தகைய தாய்க்கு தன் மகன் குருடாய் இருப்பது எவ்வளவு மன வேதனையளித்திருக்கும்? து'ஆ செய்ய ஆரம்பித்தார். ஒன்றல்ல, இரண்டல்ல...யாரிடமும் கேட்டல்ல...கண்கள் இரண்டிலிருந்தும் ஆறுகள் பாய்கின்றனவோ என எண்ணுமளவிற்கு இறைவனிடம் இறைஞ்சுவதில் சிறிதும் குறைவின்றி எல்லா நேரமும் அதே நோக்கத்தில் து'ஆவும் தொழுகையுமாக இருந்தார். அல்லாஹ்வின் கருணைக்கரம் அவரை நோக்கியும் நீண்டது. அவரின் கனவில் ஓர் நாள் நபி இப்றாஹீம்(அலைஹ்) அவர்கள் வந்தனர். வந்தவர்கள் அந்த தாய்க்கு ஆறுதல் கூறி, அவர்களின் து'ஆ இறைவனிடத்தில் ஏற்கப்பட்டதை கூறி அதன் பலனாய் இமாமவர்கள் பார்வை கிடைக்கப் பெற்றதையும் கூறினார்கள். அல்ஹம்துலில்லாஹ் தூக்கத்திலிருந்து விழித்த தாய் அந்த கனவில் வந்த செய்தியை உண்மையென கண்டார்கள். இமாமவர்களின் கண்களில் பார்வை அருளப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். அதன்பின் அந்த தாய் தன் மகனை எவ்வாறு வளர்த்தார் என்பது இமாமவர்க்ளின் வாழ்வின் மூலமும், அவரின் ஒப்பற்ற புத்தகங்கள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அந்த தாயின் து'ஆ ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணிகள்:
  • அல்லாஹ் மீதான அசையாத நம்பிக்கை, அவனின் உதவி மேலான நம்பிக்கை.
  • து'ஆ ஏற்றுக்கொள்ளபட வேண்டிய சூழலை உண்டாக்கியது (ஆம்! து'ஆ ஒவ்வொன்றும் கபூல் ஆவதற்கு தேவையான காரணிகள் பல உண்டு )
  • தம் பிள்ளைகள் இஸ்லாத்திற்காகவே வாழ்ந்து அதன் பாதையிலேயே மரணிக்க வேண்டும் என மனதில் உறுதியுடன் வாழ்ந்தது.
  • இன்னும் பல கூறலாம்.

நம்மை நோக்கி நாம் கேட்க வேண்டிய கேள்வி:

  • நாம் எவ்வளவு தூரம் நம் குழந்தைகளுக்காக து'ஆ செய்கின்றோம்?
  • அவர்களின் உடல் நலனுக்காகவும், பாட சம்பந்தமாகவும் கட்டாயம் செய்வோம். அவர்களின் ஆகிரத்திற்காக?
  • அல்லாஹ்விடம் அவர்களுக்காக தவ்பா செய்து?
  • அவர்களின் அமல்களை அல்லாஹ் பொருந்திக்கொள்ள?
  • நாளை கப்ரில் நாம் சென்ற பிறகு நமக்காக து'ஆ செய்யும் ஹிக்மத்திற்காக?

யோசியுங்கள். முடிவு உங்கள் கையில். எப்பொழுதும் நம்மை மாற்றிக் கொள்ளலாம்...திண்ணமாக அல்லாஹ்வின் உதவி மிக மிக அருகில் உள்ளது!!

இன்ஷா அல்லாஹ் இன்னும் பல மின்னும் வைரங்களோடு சந்திப்போம். அதுவரை தேவை து'ஆ.

September 24, 2010

குழந்தையின் கல்வி எங்கிருந்து ஆரம்பமாகின்றது? (part 4)

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு அன்பின் சகோதர சகோதரிகளே,

நீண்டதொரு இடைவேளைக்கு பிறகு தொடர்கின்றேன். மன்னிக்கவும். இந்த தொடரின் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்களை படித்து விட்டீர்களா?



இந்த பாகத்தில் கர்ப்ப காலத்தில் சிசுவிற்கு தரப்படும், தர வேண்டிய, இன்னும் நம்மை அறியாமலே தந்து கொண்டிருக்கின்ற கல்வியைப் பற்றி காணலாம். இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், கரு தங்கிய பின் அதற்கென அதிகமதிகம் அல்லாஹ்விற்கு நன்றி கூர்வதும், அதிகமதிகம் திக்ரு ஓதுவதும் தாய்க்கும், பிள்ளைக்கும் நன்மை.

கர்ப்ப காலம் ஆரம்பித்ததை அறிந்த பின் செய்ய வேண்டியதில் முதலாவது எவ்வளவு இயலுமோ அவ்வளவு குர்‍ஆனிலும், இன்னும் பிற இஸ்லாமிய புத்தகங்களிலும், ஒளி / ஒலி வடிவங்களிலும் அவற்றை அதிகமதிகம் செவி மடுப்பதும் நாவில் சதா சர்வ காலமும் புழங்க வைப்பதுமே ஆகும். இதன் பாதிப்பு எவ்வளவு தூரம் என்பதற்கு எந்த அசாதாரண ஆன்மாக்களையும் தேட வேண்டாம். நம் வீட்டிலோ அல்லது நம்மை சுற்றியிருப்பரிடத்திலோ தென்படும் குழந்தைகளே போதும். உதாரணத்திற்கு சில குழந்தைகள் ஒரு நடிகருக்கோ அல்லது ஒரு சீரியல் நாடகத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட திரைப்பட பாட்டுக்கோ தனிச்சையாய் சில ரெஸ்பான்ஸ் காட்டு, அதற்கு பிடித்திருக்கின்றது என்பதை குறிப்பிடும். என்னுடைய ஒன்று விட்ட சித்தப்பா மகன் இருவரை நான் பார்த்திருக்கின்றேன். எந்த விளையாட்டு எங்கே விளையாடிக் கொண்டிருந்தாலும் சன் டிவியில் செய்திகள் போடும் நேரம் சரியாக டீவி முன் ஆஜராகி விடுவர். அதில் அந்த செய்தி வாசிப்பவர் பெண்ணோ ஆணோ வந்து வணக்கம் கூறிய பின்னே கலைந்து செல்வர். ஏன் என நான் யோசித்துள்ளேன். பிறகு கூர்ந்து கவனித்ததில் இரு விஷயம் தெரிந்தது. எங்கள் சித்தப்பா மாலை வீட்டிற்கு வந்த பின் செய்திகளுக்கு மட்டும் ஒலி சற்று அதிகம் வைப்பதும், வீட்டில் மற்றனைவரும் சப்தங்களை குறைத்துக் கொள்வதும், இன்னும் எங்கள் சித்தி, பெண்களுக்கேயான நடைமுறையாக வாசிப்பவர் ஆணா பெண்ணா என காணவும், அவரின் சேலை அல்லது நகை போன்ற விஷயங்களை கவனிக்க சில நிமிடம் நின்று பார்த்துவிட்டு செல்வதும் இயல்பாக எப்பொழுதும் நடக்கிறது. இதுவேதான் அவர் கருவுற்றிருக்கும் போதும் நடந்திருக்கும். கருவில் உள்ள சிசுவிற்கு தாயின் ஆர்வம் தனக்கும் ஒட்டியிருக்கும். மற்ற வேளைகளைப் போலல்லாமல் அந்த நிகழ்ச்சிக்கு மட்டும் வீட்டில் காட்டப்படும் முக்கியத்துவம் மனதில் நின்றிருக்கும். இது போல பல விஷயங்களை நீங்கள் பிள்ளைகளையும் அவர்களின் தாய் தந்தையரையும் கூர்ந்து கவனித்தால் புரியும். இதிலிருந்து இந்த பகுதியில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? கர்ப்ப காலத்தில் காட்ட வேண்டிய கவனம், நீங்க‌ள் எதையெல்லாம் அனுபவிக்கின்றீர்களோ, அதையெல்லாம் அந்த சிசுவும் அனுபவிக்கின்றது.

சரி, இனி எப்படி குழந்தையின் இந்த ஆர்வத்தை மேம்படுத்துவது? எந்த மாதிரி குழந்தையை நீங்கள் வளர்க்க விரும்புகின்றீர்களோ அதன் அடித்தளத்தை இட தங்களிடம் பத்து மாதம் உள்ளது. அதன் பின்னும் நேரம் உள்ளாது. ஆனால் இந்த பத்து மாதமானது, மிக மிக டெலிகேட்டானது. அப்பொழுதுதான் மெழுகப்பட்ட சிமெண்ட் தரையைப் போல. அதில் ஏதும் ஒடுக்கு விழுந்து விட்டாலோ, பள்ளமாகி விட்டாலோ மேற்பூச்சு செய்து மேல்வாரியாக சரி செய்யலாமே ஒழிய அதை முழுவதும் செப்பனிடுவது கஷ்டமே.

செயல் முறையில் இதை செவ்வனே செய்ய என்ன செய்யலாம்? வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருப்பவரா? அதிகம் குர்‍ஆன் ஓதுங்கள். சீடீயிலோ அல்லது டேப்பிலோ குர்'ஆனை ஒடவிட்டு கேளுங்கள், நஙு ஓதத் தெரிந்தவரா, பத்து மாதம் முழுதும் ஏதாவது சூறாவை மனனம் செய்யுங்கள். புதிய புதிய து'ஆக்களையும், திக்ருக்களையும் மனனம் செய்யுங்கள். இதுவரை குர்'ஆன ஓத தெரியாமலே காலம் கழித்து விட்டீர்களா இந்த பத்து மாதத்தில் ஒரு தடவையாவது தெளிவாய் ஓதுமளவிற்கு கற்றுக் கொள்ளுங்கள். இஸ்லாமிய கோட்பாடுகளைப் பற்றியும், இஸ்லாமிய கதைகளையும் உங்கள் குழந்தைக்கு நேரில் சொல்வது போல கதை சொல்லுங்கள். வேலைக்கு செல்பவர் ஆயினும் சிறிது நேரம் தனியே இதற்காக எடுத்துக் கொண்டு நல்முறையில் செலவிடுங்கள். இவையெல்லாம் போதனையல்ல. என் மகனை சுமந்த காலத்தில் நான் செய்து கண்ணாற அதன் பலனை காணும் பாக்கியம். நான் மட்டுமல்ல, இன்னும் பல தாய்மார்கள் இதனை கண்ணுற்று இருக்கின்றார்கள். இப்பொழுதும் என் மகன் (இரண்டரை வயதாகின்றது) மேலுக்கு சுகமில்லாமல் ஆகிவிட்டாலோ, ஏதாவது ஒரு காரணத்தினால் உடம்பும் மனமும் அமைதிலாமல் இருந்தாலோ, என்ன செய்தாலும், என்ன மருந்து போட்டாலும் கேட்க மாட்டான். வலியிலும், இயலா நிலையிலும் அரற்றிக் கொண்டே இருப்பான். குர்'ஆன் ஓதினாலோ அல்லது சீடீ ப்ளேயரில் ஓட விட்டாலோ மட்டுமே சற்று அமைதியுறுவான். அதுவும் அது நிற்காமல் ஓதிக் கொண்டே இருக்க வேண்டும். என் கண்களில் அவனின் ஆர்வத்தையும் அல்லாஹ் அவனுக்கு தந்துள்ள மனதையும் நினைத்து ஆனந்தக் கண்ணீர் ஒரு புறமும், அவனின் உடல் வருந்துவதைக் கண்டு மனவேதனையில் கண்ணீருமாக நிரம்பி இருக்கும். இந்த இரண்டரை வயதில் அவன் கற்றுக் கொண்டதும் கற்றுக் கொள்வதும், அவனின் ஆர்வமும் என்னுடைய இந்த வயதுடன் ஒப்பிடும்போது நான் சிறு எறும்பின் அளவும் இல்லை. எப்படி சாத்தியமானது? கர்ப்ப காலத்தில் செய்த து'ஆக்களும், அதன் மேலான அமலும், எல்லாவற்றிற்கும் மேலாய் அல்லாஹ் சுப்ஹானவத ஆலாவின் அருளுமே காரணம். அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.


இந்த காலத்தில் தாய்க்கு மட்டுமே பங்கா, நாங்களெல்லாம் நற்கூலி சம்பாதிக்க வேண்டாமா என்று சகோதரர்களே எம்மை முறைக்காதீர்கள். உங்களுக்கும் சம பங்குண்டு இதில். எப்படி??

மாலை வியாபரமோ, வேலையோ முடித்து விட்டு வந்த பின்னோ..அல்லது இரவு தூங்கப் போகும் முன்னோ மேலுள்ள எல்லா வழிகளையும் நீங்கள் பின்பற்றலாம். தாயின் வயிற்றினருகில் அமர்ந்து அழகிய கிரா'அத்துடன் ஓதிக் காட்டலாம். அல்லது ஹதீத்துக்களிலிருந்தும் குர்'ஆனிலிருந்தும் நல்ல கதைகளைக் கூறலாம். இது ஏதும் செய்ய இயலாதவர்களாக எட்ட முடியா தூரத்தில் இருக்கின்றீர்களா, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே இதை செய்யுங்கள். அல்லாஹு ரப்புல் ஆலமீன் அதன் பலனை தங்களுக்கு நிச்சயம் கண்ணாற, மனதார பார்க்கச் செய்வான். நினைவு செய்யும்போதெல்லாம் அதிகமதிகம் து'ஆ செய்யுங்கள், மறக்காமல்.

பத்து மாதத்தில் மிகவும் முக்கியமாக இஸ்லாத்தில் அல்லாத எந்த பித்‍அத்தையும் கிட்டே நெருங்காதீர்கள். நம்மில் பல பேருக்கு உள்ள சங்கடம் என்னவெனில், பித் அத் எது என்பதை எப்படி தெரிந்து கொள்வது? அப்படியே தெரிந்து கொண்டாலும் தாய் தந்தைக்கோ அல்லது கணவனுக்கோ அல்லது அவரின் தாய் தந்தைக்கோ மறுத்து எப்படி இருப்பது?

இது இந்த கட்டுரையின் நோக்கமல்ல என்றாலும் கர்ப்ப காலத்தில் சண்டை சச்சரவுகள், அவை அளவில் சிறியனவோ, பெரியனவோ...தாய் மற்றும் சேய்க்கு ஆபத்தான விஷயங்கள். எனவே இதிலிருந்து மீள் ஓர் வழி சொல்கிறேன். (நினைவில் வையுங்கள். நான் ஆலிமோ, முஃப்தியோ அல்ல. ந'ஊதுபில்லாஹ்) எந்த செயலையும் செய்யும் முன் நபிவழியில் இதற்கு ஆதரமிருக்கிறதா என்று ஆராய்வது அவசியம். அதன்பின், அந்த செயல் கல்சுரலாக செய்யப்படுகின்றதா அல்லது அதிலும் சேர்த்தியில்லையா என்பதை கவனிக்க வேண்டும். உதாரணத்திற்கு, கர்ப்ப காலத்தில் எல்லாருடைய உடம்பும் ஒன்று போல இருக்காது. சில பேருக்கு உடையும், ஆபரணங்களுமே பாரமாய் தெரியும். அப்பொழுது கை நிறைய வளையல்கள் போட சொன்னாலோ, அல்லது தினமும் பூக்களால் அலங்கரித்துக் கொள்ள சொன்னாலோ....இது இஸ்லாத்தில் உள்ளதா என வாதம் செய்ய கிளம்பாதீர்கள். இது கர்ப்பஸ்த்ரீக்கு சந்தோஷத்தை அளிக்க நடைமுறையில் வந்துள்ள ஓர் செயல். தங்களுக்கு விருப்பம் இல்லையென்றால், யார் மனமும் நோகாதபடி நாசூக்காக தவிர்த்துக் கொள்ளுங்கள். அதே நேரம் தங்களுக்கு பின் விளைவுகள் ஏதும் ஏற்படாது என்னும் பட்சத்தில் மற்றவருடைய சந்தோஷத்தில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். ஏர்வாடி தர்காக்கும், நாகூருக்கும் போய் வர வேண்டுமென கட்டளைகளா. போய் வாருங்கள். அங்கிருப்பவர்களுக்கு சலாம் சொல்லுங்கள். மனதில் அல்லாஹ்விடம் மட்டும் அதிகமதிகம் தவ்பா செய்து அங்கே வழி தவறி ஷிர்க்கில் உள்ள எல்லோரையும் நல்வழிப்படுத்த து'ஆ கேளுங்கள். முடிந்தவரை சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல் பொறுமையுடன் வாழ்வதை இப்பொழுதே உங்கள் குழந்தைக்கு கற்றுக் கொடுங்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் இஸ்லாமிய கருத்தரங்களும், குர்'ஆன் மற்றும் ஹதீஸ் வகுப்புக்களும் ஆங்காங்கே நடந்து கொண்டேயுள்ளன. முடிந்தவரை அவற்றிலெல்லாம் கலந்து கொள்ளுங்கள். உங்களால் அமரவே முடியாது என்ற நிலை வந்தால் ஓரத்தில் படுத்துக் கொள்ளுங்கள். அல்லது சேரை விட்டுவிட்டு கீழே கால்கள் நீட்டி அமர்ந்து கொள்ளுங்கள். ஏன் என்று கேட்டீர்களானால், அல்லாஹ்விற்காக அவனின் வேதத்தையும் அவனின் மார்க்கத்தையும் படிக்க சேரும் கூட்டத்தினர்க்கு மலக்குமார்களின் ஸ்பெசல் து'ஆ கட்டாயம் உண்டு. நீங்கள் அந்த வகுப்புகளில் சேர்ந்து ஆலிம் ஆகவிட்டாலும், அந்த கூட்டத்தில் இருந்த காரணத்திற்காக மலக்குமாரின் து'ஆவில் நீர் இணைவீர், தங்களின் செல்வங்களும். இன்னும் அதிகமான சாந்தியும் சமாதானமும் நற்பண்புகளும் உங்கள் குழந்தைகளிடம் நிலைக்கும்.


முடிவில் இன்னொரு விஷயத்தையும் நினைவில் வையுங்கள். நீங்கள் ஒரு பொருளையோ, வேலையையோ மன விரும்பி ஒன்றி செய்யாதவரை, தங்கள் குழந்தை அதை கற்றுக் கொள்ளும், கற்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். சட்டியிலில்லாமல் அகப்பையில் வராது!!

கர்ப்ப கால முடிவில்...தொடர்வோம் இன்ஷா அல்லாஹ்!!



.

September 08, 2010

ஈத் முபாரக் !!

August 24, 2010

ரமதான் மாதத்துக்கென புதிய தளம்

அஸ்ஸலாமு அலைக்கும் மக்களே...

ரமலான் மாதத்தில் படிப்பதையும், பயன்பட்டதையும் ஒருங்கே சேர்த்து வைக்க ஒரு வலைப்பூவை தொடங்கியுள்ளேன்...இன்ஷா அல்லாஹ் அதனை தாங்களும் படித்து, மற்ற சகோதர சகோதரிகளுக்கும் தெரிவித்து நற்கூலியை சம்பாதித்துக் கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ்.


  • து'ஆவில் கட்டாயம் பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மறக்காமல் நினைவுகூருங்கள்.  
  • எங்கள் பள்ளி வாசல் கட்டிட வேலைக்கும் நன்கொடை தாருங்கள். ஏனைய சகோதர சகோதரிகளையும் இன்ஷா அல்லாஹ் இறைவனுக்கு அழகிய கடனை தர நினைவூட்டுங்கள்.

வஸ்ஸலாம்

August 05, 2010

பள்ளிவாசல் வளர உதவிடுங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு,

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,


எங்கள் வீட்டினருகில் உள்ள இந்த பள்ளிவாசல் வளர உதவிடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் பல வளங்களை இவ்வுலகிலும் மறு உலகிலும் தந்தருள்வானாக. ஆமீன். ரமதான் மாதம் வாசலின் வெளியே விரைந்து வந்து கொண்டிருப்பதால், மேன்மைமிகு மாதம் முடிந்த பின் உங்களை மீண்டும் சந்திக்கிறேன், இன்ஷா அல்லாஹ்.

பள்ளியின் வலைப்பூ: மஸ்ஜித் மாமூர்