May 24, 2010

குழந்தையின் கல்வி எங்கிருந்து ஆரம்பமாகின்றது? (part 2)

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர் ரஹீம்.

கடந்த பதிவில் குழந்தையின் கல்வி என்பது நம் திருமணத்திற்கு முன்பே திட்டமிடப் பட வேண்டியது என்று கூறியிருந்தேன். திருமணமான பின்பும் கணவன் மனைவி எவ்வாறு தம் நற்குணங்களை வளர்த்துக் கொள்ளலாம் என அலசுவோம்.


1. முதலாவதாக தீனை நல்ல முறையில் பேணும் ஆண் (அ) பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆதாரம் 1: ஒரு பெண் அவளது அழகு, செல்வச்செழிப்பு, குடும்ப கௌரவம், மார்க்கப்பற்று என்ற நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வெற்றி பெறுவீராக! என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அபூஹூரைரா, அபூஸயீத் அல்-குத்ரி, ஜாபிர் போன்ற நபித்தோழர்கள், புகாரி, முஸலிம், அபூதாவுத், தாரமி, நஸயீ, இப்னுமாஜா

ஆதாரம் 2:மார்க்கத்திலும், குணத்திலும் (சிறந்த) நீங்கள் விரும்பும் மனிதர் உங்களிடம் (மணப்பெண் கேட்டு) வந்தால் அவருக்கு திருமணம் செய்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், பூமியில் கடுமையான குழப்பமும், ஒழுக்கமின்மையும், அமைதியின்மையும் ஏற்படும்.அபூஹூரைரா (ரலி), திர்மிதி

2. இரண்டாவதாக தங்கள் கணவனைப் பற்றியோ (அ) மனைவியைப் பற்றியோ வெளியிடத்தில் குறை சொல்லாத, காண்பித்துக் கொடுக்காத உறவு வேண்டும்.
ஆதாரம்: அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. (அல் குர்ஆன் 2:188)

மேற்கண்ட ஆதாரம் ஒரு காரணத்துக்காக மட்டுமில்லாமல் இன்னும் பல காரணங்களுக்காக தரப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு நபிகளாரின் (ஸல்) வாழ்வையே எடுத்துக் கொள்ளுங்கள். நபியவர்களுக்கு (ஸல்) முதன் முதலில் வஹீ வந்ததும் அவர் தஞ்சமடைந்தது யாரிடம்? சித்தப்பாவிடமோ, உற்ற தோழர்களிடமோ அல்ல, மாறாக, தன் மனைவியிடம், புதிய அனுபவம் ஒன்று கிடைத்ததையும் அதனால் உற்ற பயத்தையும் யாரிடம் பகிர்ந்தார்கள்? தன் மனைவியிடம், இன்னும் கதீஜா (ரலி) அவர்களின் மேன்மையையும் பாருங்கள். தன் கணவர் பொய் கூறுவார் எனவோ, கனவு கண்டிருப்பார் எனவோ ஒரு கணம் கூட சிந்திக்க வில்லை. மாறாக, உண்மை என நம்பினார், அத‌ன் பின் நபியவர்களுக்கு (ஸல்) ஆதரவான சொற்களை கூறினார், பின் இன்னும் மனம் நிம்மதியடைய தன்னுடைய உறவினர், அதுவும் ஞானம் மிக்கவர் என்று கருதப்பட்டவ‌ரிடம் கொண்டு சென்றார். உதாசீனப் படுத்தவில்லை, உண்மையல்ல என ஒரு க்ஷ‌ணம் கூட நினைக்கவில்லை. இத்தகைய ஒரு பாதுகாப்பை திருமண உறவு ஒன்றே தரமுடியும். எனவேதான் அல்லாஹ் த ஆலா, பாதுகாப்பு அளிக்கக் கூடிய, கவசமாய் இருக்கக்கூடிய, உங்கள் இரகசியங்களை மறைக்கக் கூடிய, உங்களுக்கு மதிப்பை தேடி தரக் கூடிய (ஆம், ஆடையில்லா மனிதனுக்கு மதிப்புண்டோ?) ஒரு ஆடையாக திருமண உறவை தேடுங்கள் என்று கூறுகின்றான்.

3. அப் பெண்ணிடத்தில் அழகு இருக்கின்றது, வசதி இருக்கின்றது, இன்னும் மனம் விரும்பியவாறு இருக்கின்றாள் என்றெல்லாம் நினைத்து வேற்று மார்க்கத்தை சார்ந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டாம். அல்லாஹ் நாடினால் அவளை இஸ்லாத்திற்கு மாற்றிவிடுவார் என குருட்டம்போக்கு சிந்தனை வேண்டாம்.
ஆதாரம்: இணை வைக்கும் பெண்களை அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும், அவளைவிட இறை நம்பிக்கையுடைய ஓர் அடிமைப்பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள். (அல் குர்ஆன் 2:221)

இணை வைக்கும் ஒரு பெண்ணை விட இஸ்லாத்தின் பால் நம்பிக்கை கொண்ட அடிமையே மேல் என நபியவர்களும் (ஸல்) வாக்குரைத்திருக்கின்றனர்.
4. நன்னடத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆதாரம்: அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். “பெண்களில் மிகச் சிறந்தவர் யார்?” நபி (ஸல்) அவர்கள், “கணவன் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். ஏவினால் அவனுக்கு கட்டுப்படுவாள். அவனது பொருளிலும் அவள் விஷயத்திலும் வெறுப்பூட்டும்படியான காரியங்களில் (ஈடுபட்டு) அவனுக்கு மாறுசெய்யமாட்டாள்” என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

இந்த ஹதீத் ஆண்களுக்கும் பொருந்தும். எவ்வாறு? ஹலாலான‌ முறையில் பொருளீட்டி குடும்பத்தை ஹலாலான வழியில் மகிழ்ச்சி கொள்ள வைக்க வேண்டும். மேலும் மனைவியிடமும் மற்றவர்களிடமும் நல் முறையில் நடந்து கொள்ள வேண்டும். நல்ல மனைவியும் சில சமயங்களில் வெறுப்பூட்டும்படி நடந்து கொள்வது இயல்பே. ஏனெனில் நாம் எல்லாருமே குற்றம் புரியக் கூடிய, பலவீனமான மனிதர்களே. அவ்வேளைகளிலும் பொறுமையுடன் குடும்பத்தை காக்க வேண்டிய பொறுப்பு ஆணுக்கு உள்ளது.
ஆதாரம் 1: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எந்தவொரு முஃமினும் முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் மற்றொரு குணத்தை பொருந்திக்கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

ஆதாரம் 2:பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்! எனெனில் பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ பலவந்தமாக நிமிர்த்திக்கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஆதாரம் 3: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே. உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே.” (ஸுனனுத் திர்மிதி)

மனைவியை வெறுக்காமல், தன்னிடமும் கோபம் உண்டு என்ற விதத்தில் நடக்க வேண்டும். இன்னும் கவனித்தால், இது போன்ற சண்டை சச்சரவுகள் குழந்தைகளின் மனதில் அழியா சுவடுகளை ஏற்படுத்திவிடும். இன்னும் தாய் தந்தை மேல் மதிப்பையும் நம்பிக்கையையும் குறைத்து விடும். இன்னும் பல விளைவுகளை ஏற்படுத்தும். எனவே எதிர்காலத்தில் தாய் தந்தையாய் வழி காட்ட வேண்டிய பொறுப்புள்ளதை எண்ணி, கணவன், மனைவி இருவருமே தத்தம் குணங்களை மேம்படுத்தி வாழ வேண்டும்.

5. திருமணத்திற்கு பிறகும் தாய் தந்தையரை பேண வேண்டும்.தாய் தந்தையை பேணிக் காப்பது எல்லோர் மீதும் கடமையாகின்றது. பெண்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படவில்லை. எனவே திருமணத்திற்கு பின்பும் தாய் தந்தையரை பேணிக் காக்க வேண்டும். அனைத்து உறவுகளையும் பேணிக் காப்பவர்களாக இருத்தல் நம் குழந்தைகளுக்கு இஸ்லாமிய பண்புகளை யாரும் கற்பித்து தராமலே பழகிக் கொள்ளக் கூடிய இனிய சூழலை தரும்.
ஆதாரம் 1: பெற்றோரை பேணுமாறு அல்லாஹ் கூறும் அறிவுரை
நாம் மனிதனுக்கு, தன் பெற்றோர் இருவருக்கும் உபகாரம் செய்யவேண்டியது பற்றி உபதேசம் செய்தோம்” (லுக்மான்: 14)

ஆதாரம் 2: இன்னும், நினைவுகூருங்கள். நாம் இஸ்ராஈல் மக்களிடத்தில், ‘அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நீங்கள் வணங்கக் கூடாது. உங்கள் பெற்றோருக்கும் நன்மை செய்யுங்கள்’ என்று உறுதிமொழி வாங்கினோம்” (அல்-பகறா: 83)

ஆக, நற்குணமுள்ள கணவன் மனைவியே நல்ல குழந்தைகளை, அல்லாஹ்விற்கு பிரியமான செல்வங்களை பெற்றெடுக்கவும், வளர்க்கவும் முடியும். உடனே, இதனை படித்த பின் கணவனிடமோ, மனைவியிடமோ பயான் செய்ய ஆரம்பித்து விடாதீர்கள். முதலில் உங்களை சிறிது சிறிதாக மாற்றுங்கள். பின் உங்கள் செயல்கள் மூலம் மற்றவரிடம் மாற்றத்தை கொண்டு வர முயற்சி செய்யுங்கள். முயன்றால் முடியாதது இல்லை. முயற்சி செய்யுங்கள். அல்லாஹ்வினிடத்தில் அப்படிப்பட்ட குணத்தையும், வாழ்வையும் தர அதிகமதிகம் து'ஆ செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்.

தேவை து'ஆ

2 comments:

  1. //அல்லாஹ்வினிடத்தில் அப்படிப்பட்ட குணத்தையும், வாழ்வையும் தர அதிகமதிகம் து'ஆ செய்யுங்கள்//

    இன்ஷா அல்லாஹ்....

    ReplyDelete
  2. @ஜெய்லானி பாய்,
    சும்ம ஆமீன்.

    ReplyDelete